Monday, February 24, 2025
இன்று மகாசிவராத்திரி சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> என் செய்வேன்? <>
ஆற்றா தரற்றும் அடியேனின் முறையீட்டை
ஏற்றாய்நீ ஏலா திருப்பதுமேன் - போற்றியுனை
விண்ணோரும் மாலயனும் வேண்டிநிற்க ஏழையென்னைக்
கண்ணோக்க நேரமின்மை காரணமோ – தண்சடையில்
மேவிக் குளிர்விக்கும் வெண்டிரையா ளோடுன்னைத்
தாவி அணைக்கும் தளிருடலாள் கூட்டினிலே – பாவியெனைப்
பற்றி நினைக்கப் பரமனுனக்(கு) ஓர்நொடியும்
சற்றும் கிடைத்திலையோ சங்கரா – பற்றுதலை
ஓட்டில் இடும்பலிக்காய் ஊரெல்லாம் சுற்றிவந்த
வாட்டத்தில் என்னை மறந்தனையோ- ஆட்டத்தின்
ஓட்டத்தில் இங்குயான் உள்ளேன் எனும்நினைப்பும்
ஓட்டம் பிடித்ததுவோ உத்தமர் – பாட்டமுதை
அள்ளிப் பருகிற்கும் அவ்வேளை அடியேனின்
கள்ளம் நிறைமனத்தைக் கண்டோ ஒதுக்கினைநீ
இன்னுமுன் நெஞ்சம் இளகிலையேல் யார்க்குரைப்பேன்
என்செய்வேன் ஈசா இனி.
(நேரிசைக் கலிவெண்பா. ஏற்றாய் = மாட்டை வாகனமாகக் கொண்டவனே; வெண்டிரையாள் = வெண்மையான அலையுள்ள கங்கையாறு.)
(நேரிசைக் கலிவெண்பா. ஏற்றாய் = மாட்டை வாகனமாகக் கொண்டவனே; வெண்டிரையாள் = வெண்மையான அலையுள்ள கங்கையாறு.)
… அனந்த் 25-2-2025