Sunday, June 22, 2025

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


                         திருச்சிற்றம்பலம்




                         <> மறவீரே <>

அம்மையுடன் அவனாடும் அழகினைநாம் தரிசிக்க

… அம்பலத்தை நாடுகையில் அவனோநம் அகத்துள்ளே 

நம்மகத்தில் தான்நிதமும் நடிப்பதனைக் காட்டிநம்மை

… நாணமுறச் செய்திடுவான் நமைமறந்து துதிக்கையிலே

இம்மையொடு மறுமையுமே இல்லாத பெருவெளியில்

… இருத்திடுவான் இத்தகைய பெரும்பேற்றை அடைவதற்கு

வம்மின்இவ் வுலகீரே வழிபடுமின் அவன்தாளை

….வாழ்வெடுத்த பயனிதுவே மறவீர்நீர் மறவீரே


                                                             .... அனந்த் 23-6-2025                                

Saturday, June 7, 2025

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

            <> ஏற்றிடுவாய் <>


எண்ணச் சுழலில் இடர்ப்பட்(டு) உனைச்சாரா

வண்ணமிந் நாள்வரை வாழ்ந்துவிட்டேன்சுண்ணவெண்

ணீறணி நின்மலநின் தாள்கதியென் றின்றுவந்தேன்

சீறாதேற் பாய்நீ பரிந்து.

 (பரிந்து – அன்பு மேலீட்டு)