Tuesday, December 25, 2012

காண வேண்டாமோ?

<> காண வேண்டாமோ? <>
திருச்சிற்றம்பலம்

சுற்றம் மனையென் றென்நாளைத் தொலைத்த பின்னர் உன்நினைவு

… சற்றென் மனத்தில் தோன்றிடஉன் திசையை நோக்கி அடிவைத்தேன்

பெற்ற தாய்போல் பரிவுடன்நீ பறந்தென் பாலே வரக்கண்டு

… பிறிதோர் அடிநான் வைக்கையிலே பிரிந்து செல்லல் முறையாமோ?

வற்றிக் கிடந்த கிணறொன்றில் வழுக்கி விழுந்த ஒருவன்கைப்

… பற்றக் கயிற்றை நீட்டியபின் பட்டென் றறுத்தல் முறையாமோ?

சிற்றம் பலத்துள் நடமாடும் தேவ! உன்றன் திருவுருவில்

.. சித்தம் இழந்தேன், மீண்டுமுனைத் தெரிசித் திடுமா(று)அருளாயோ?

… அனந்த் 25-12-2012

யாப்பு: பன்னிரண்டு சீர் ஆசிரிய விருத்தம். அரையடி:தேமா, மா, காய் மா, மா, காய். ஈற்றுச்சீர் புளிமாங்காய்; 1,4, 7,10 சீர் மோனை.
குறிப்பு: சிதம்பரத் திருத்தலத்தில் இம்மாதம் இருபத்தெட்டாம் தேதி அதிகாலையில் ஆருத்ரா அபிஷேகமும் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்.சென்ற ஆண்டு இத்திருக்காட்சியைக் கண்டு களிக்கும் பேறளித்தான்.
------------
பின்னூட்டம்:

ஓரடி உன்னடி என்னிடம்வந்தது
ஓரீரைந்தடி உன்னிடம் வேகமாய்
ஓடோடி வந்ததை நீஅறியாயோ
பாடும்பாடல் கேட்டு பாகாயுருகி
சித்தமெலாம் சிவனாய் இருக்குமென்
பத்தன் படும்தொல்லை நீங்க
இக்கணமே உன்னுள்ளே வந்திட்டேன்
 தக்கணமே உள்ளத்தில் பார்த்துக்கொள்

(இலக்கணம் இதுக்கு இல்லே.. தலைக்கனமும் எனக்கு இல்லே)

.. திவாகர்
----

என் முறையீடு கேட்டு அந்த சர்வேச்வரனை வரவழைத்ததற்கு நன்றி. அவன் தரிசனத்தை இழந்தது போல நம்மை எண்ண வைப்பதும் அவனே அல்லவா?.
’அலகி லாவிளை யாட்டுடை யான்அவன்’..

.. அனந்த்
----------------

இப்படி ஏங்கித் தவிக்கும் பக்தனை விட்டு எங்கு செல்ல முடியும் ஈசனால்..

//பெற்ற தாய்போல் பரிவுடன்நீ பறந்தென் பாலே வரக்கண்டு
… பிறிதோர் அடிநான் வைக்கையிலே பிரிந்து செல்லல் முறையாமோ?//
பாய்ந்து வருவதற்கு முன், சற்றுப் பின்னால் செல்வது இயற்கைதானே.. :)

//ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்.சென்ற ஆண்டு இத்திருக்காட்சியைக் கண்டு களிக்கும் பேறளித்தான். //நாங்கள் கேட்டுக் களிக்கும் ஆனந்ததையும் அளித்தான்.

.. திருமால்
--------------
அன்புள்ள அனந்த் ஐயாவிற்கு
உங்கள் பிரதோஷ பாடல்கள் ஒவ்வொன்றின் மூலமாக சிவ பெருமானின் தரிசனம் காணப் பெற்றோம் . ஒவ்வொரு சொல்லும் அவன் நாமம் சொல்லும் அழகே அழகு.
 
..அகிலா
--------------------------
பாடல் பற்றி அன்புடன் கருத்துச் சொன்ன திருமால், அகிலாவிற்கு எனது நன்றி.
..அனந்த் 26-12-2012

Monday, December 10, 2012

கருணை செய்வாய் 10-12-2012

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்  


திருச்சிற்றம்பலம் 












 

<> கருணை செய்வாய் <>



உண்ணுதல் உறங்குதல் ஒருபயன் அளித்திடாச் செயல்பல புரிவ தான

… உடலெனும் கருவியை ஒருபுறம் தாங்கிமற் றொருபுறம் அதனி னுள்ளே

எண்ணமாம் குமிழியை இடைவிடா தெழுப்பிடும் இயந்திரம் என்று காணும்
… என்மனம் என்னுமோர் சுமையினை இங்குநான் தாங்கியே சோர்ந்து நிற்க

வண்ணமாய்த் தில்லையில் வதிந்திடும் ஈச!நீ மாறிடா மகிழ்ச்சி யோடு
… மத்தளம் ஒலித்திட மாதுமை களித்திட நாட்டியம் ஆடி நிற்றல்

கண்முனே காட்டியென் கனத்தினை அகற்றிடத்  திருவுளம் கொள்வை யாகில்
.கணத்திலென் துயரெலாம் காற்றிலே தூசெனப் பறந்திடும் கருணை செய்யே!.


(தூசு = பஞ்சு, புழுதி; செய்யே = செய்வாய்)
யாப்பு: பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்;

மோனை: 1,3 (பெரும்பான்மை),8,10 சீர்கள்,


குறிப்பு: இந்தியாவில் டிசம்பர் 11 அன்று பிரதோஷம்.  
பாடலின் இசை ஒலிப் பதிவு (mp3):  http://raretfm.mayyam.com/ananth/karuNai_ceyvAy

=============================================================================
பின்னூட்டங்கள்:

2012/12/10 Chandar Subramanian <chandarsubramanian@gmail.com>
அருமையான விளக்கம்
நன்றி, சந்தர்.

’’விளக்கம்’ என்று நீங்கள் எழுதியதைப் பார்த்தவுடன், இப்பாடலைப் பற்றி மேலதிகமாக எனது விளக்கத்தைத் தரலாமெனத் தோன்றியது.

முந்தைய பிரதோஷப் பாடலில் இரண்டு மாறுபட்ட காட்சிகள் தென்பட்டதைப் போல, இங்கு, ஒருபுறம் உடலென்னும் சுமை போதாதென்று அதனினும் பளுவான ஒரு சூக்குமமான கருவியாக இயங்கும் மனத்தையும் சேர்த்துச் சுமந்து, சுமந்து தளவுற்று வருந்தும் நான். மறுபுறம், நேர் மாறாக, நிரந்தரமான ஆனந்தத்துடன், தன் பக்கலில் உள்ள உமையவளையும் களிப்பிலாழ்த்தி, அண்டசராசரப் பளுவையும் அலட்சியமாகத் தாங்கியவாறு தில்லை மன்றில் நின்றாடும் பரமேசன். இவ்வாறு காணும் இருவகையான நிலை மாற வேண்டுமெனில், அதற்கு அவ்விறைவன் என்பால் மனமிரங்கி என் அகக்கண்முன் தனது பரமானந்த உருவைக் காட்டி அதை என்னுள் நிலைபெறச் செய்வதே வழியாகும் என்பது பாடலின் கருத்து.
அனந்த்
11-12-2012
 -----------------------
ஒலி இணைப்பிற்கு நன்றிகள் ஐயா. பலமுறை கேட்டேன்; கேட்கத் தூண்டுகிறது!

அன்புடன்,
அர்விந்த்
----------------