இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> இவன் எழில் <>
பாலைநிகர் மேனியதில் பாதியினைப் பச்சைநிற
மாலவனின் சோதரிக்கு வழங்கியிரு வண்ணங்கொள்
கோலமுடன் மன்றினிலே கூத்தாடும் இவனழகில்
காலமெனும் கணக்கெல்லாம் கரைந்தழிய மூழ்குவனே.
விண்ணவர்தம் மணிமுடிகள் வீசுமொளித் திருப்பாதம்
வெண்ணிறநீ(று) அணிந்துவிடை மேலேறும் திருக்காட்சி
தண்மதியம் போல்முகத்தில் தவழ்முறுவல் யாவையுமென்
கண்களினால் விழுங்கிடுவேன் கரைந்திடுமென் துயரெல்லாம்.
சூடிடுவான் கொன்றையுடன் தும்பையுமாம் நீள்செவியில்
ஆடிடுமாம் தோடெனஈர் அரவங்கள் மிளிர்மிடற்றில்
கூடிடுமாம் ஆழிவிடம் கூத்தாடி இவனெழிலைப்
பாடிடுமாம் என்நாவும் பலப்பலவாய்க் களிமிகுந்தே
(மேனி முழுவதும் வெண்ணீறு பூசி இருப்பதால், பால்வண்ணன்)
பின் குறிப்பு:
வகைவகையாய் உனதுருவின் வடிவழகை மாந்திமனக்
குகையினுளே வைத்துவப்பேன் கூத்தாடித் திரிவோய்!என்
புகைப்படத்தை யாகிலும்நீ பார்த்ததுண்டோ? பார்த்திருப்பின்
தகைமையில்லா எளியேன்பால் தயைகாட்டத் தவிராயே!
30-12-2013