Friday, March 28, 2014

அறிவீரோ?

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

<> அறிவீரோ? <>

Inline image 1

குஞ்சி அழகும் குறுநகைசேர்
.. கொவ்வை இதழும் கொண்டெமது
நெஞ்சைக் கவர முயலும்ஐயே!
.. நும்மைப் பற்றிப் பிறர்கூறும்
வெஞ்சொல் பலவும் அறியாத
.. வெகுளி எனநீர் இருப்பதனைக்
கொஞ்ச மேனும் நீர்உணரக் 
.. கூறு வேன்நும் செவிமடுப்பீர்!

நஞ்சர் என்பார் ஒருசாரார்
.. நம்பினோரை அலைக்கழிக்கும்
வஞ்சர் என்பார் ஒருபாலார்
.. வறியர் காட்டார் உடலெரிந்து
மிஞ்சும் நீற்றுப் பொடியரென்பார்
.. வெருட்டும் பேயர் பித்தரென்பார்
கெஞ்சி ஊணை இரந்துபெறும்
.. கீள்கோ வணத்தார் என்பர்இனும் 

அச்சம் தரும்பாம் பரையரென்பார்
.. அனலை ஏந்தும் தீயரென்பார்
பச்சை நிறத்தாள் பாகரென்பார்
.. பல்லில் தலைகொள் கொடியரென்பார்
இச்சை கொண்டோர் இருப்பையெல்லாம்
.. இழக்க வைக்கும் கள்வரென்பார்
இச்ச கத்தின் தந்தையெனும்
.. ஐயா! இதுநீர் அறிவீரோ?

..அனந்த் 28-3-2014 

கீள் = கிழித்தல், அரைத்துண்டம், கீறு; அலைக்கழித்தல்= அலைத்து வருத்துதல்;

தேவாரத் திருமுறைகளில் காணும் அடைமொழிகள்:
கள்வன் (திருஞானசம்பந்தர் தேவாரம்); அப்பர்: நஞ்சர், கொடியர், காட்டார், நீற்றுப்பையர் (அப்பர் தேவாரம்); பித்தன், பேயன் (சுந்தரர் தேவாரம்.)
நஞ்சர்: தீயவர். இங்கு, நஞ்சை உண்டவர்; கொடியர்: இடபக் கொடியை உடையவர்; பையர்- சிறுவர். இங்கு, திருநீற்றுப்பையை உடையவர்; தீயர்: தீயைக் கையில் ஏந்துபவர்;  

படம் நன்றியுடன்: சு.ரவி  

Friday, March 14, 2014

யாவும் உடையோன்

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

<> யாவும் உடையோன் <>


Inline image 2


மேடை யுண்டு கூரை யுண்டு மேள முண்டு வாத்ய முண்டு
.. வேத கோஷம் நான்கு முண்டு தமிழாலே

பாட ஓது வார்க ளுண்டு பாவை ஒருத்தி பக்கல் உண்டு 
.. பார்க்கத் தேவர் கோடி யுண்டு விரிமார்பில்

சூடு ரத்ன மாலையோடு தோளை ஆட்டித் தாளை நீட்டித் 
.. தோம்தை
தைஎன்(று) ஆடும் இந்தப் பெருமானை

நாட நெஞ்சில் ஆவ லுண்டு நாதன் இதனை அறிவ னென்று
.. நாளும் கனவு காண்ப துண்டு; அறிவானோ?

அனந்த் 14-3-2014