Thursday, January 21, 2016

வேடதாரி

திருச்சிற்றம்பலம்
                        



                     <> வேடதாரி <>

ஆண்டியாய் நிற்கும் நீயே அகிலமும் ஆள்வோன் ஆவாய்
.. அசலமாய் நிற்கும் நீயே அம்பலத் தாடி நிற்பாய்

பூண்டிடும் துறவிக் கோலம் புறக்கணித்(து) இரண்டு மாதர்
.. புடையமர் குடும்பி ஆகிப் புத்திர ரோடு காண்பாய்

மாண்டவர் எரியும் மண்ணில் மத்தனாய்த் தோன்றும் நீயே
.. வணங்குவோர்க் கருளும் ஈசன் வடிவிலே மாறி நிற்பாய்

வேண்டுவோர்க் கேற்ற வாறு வேடம்நீ பூணும் வித்தை
.. விளங்கிட வைத்தென் நெஞ்சில் விலகிடா வண்ணம் நில்லே. 

(நில்லே = நிற்பாயே)
(12-சீர் ஆசிரிய விருத்தம்; அரையடி: கூவிளம், மா, மா, விளம், மா, தேமா)

.. அனந்த்
21-1-2016

Monday, January 11, 2016

காரணம் அறிந்தேன்


                                               திருச்சிற்றம்பலம் 
                                                         ​

                                   <> காரணம் அறிந்தேன் <>
            

தாதை எனநீ ஆடுவதில் தம்மை மறந்துன் அடியார்கள்

…..தரையில் விழுந்து, மனம்நெகிழ்ந்து, சம்போ! எனவாய் அரற்றிநிற்பார்

……..ஏதோ இதற்குக் காரணம்என்(று) எண்ணிப் பார்த்தேன்; பலகாலம்

….……ஏங்கி நின்றும் தவம்கிடந்தும் எங்கெல் லாமோ தேடியதம்


தாதை தம்கண் முன்னேஓர் தங்கம் வேய்ந்த கூரையின்கீழ்,

…. சல்சல் என்று சதங்கையொலி தாளம் கூட்ட, அருகினிலே

…….கோதை உமைகை தட்டஉன்றன் கூத்தின் அழகைப் பார்த்தாங்குக்

………..கூடி இருக்கும் இருடிகள்கை கூப்பித் தொழும்அக் காட்சியில்தம்


வாதை  யாவும் நிரந்தரமாய் மடியக் கண்டுஇங்(கு) இனிப்பிறவி

….வாரா தென்னும் வகையினில்நீ வலக்க ரத்தை மேல்தூக்கி

……வரமும் அளிக்கும் மகிழ்ச்சியிலே வந்த உணர்வின் விளைவேஇம்

……….மாந்தர் செயல்கள் எனஅறிந்தே மகிழ்ந்தேன் அதனைத் தொடர்ந்திந்தப்


பேதை யேன்ஓர் அறிவில்லாப் பிச்சன் உன்றன் பேர்சொல்லிப்

….பிறரை நானுன் அடியனெனும் பிரமை கொள்ள வைப்பவனின்

……பிழைகள் யாவும் பொறுத்துஎன்மேல் பிரியம் காட்டி எனக்குமுன்றன்

…….பேரெ ழில்சேர் நாட்டியத்தின் பெருமை விளக்கி அருளாயோ?  


(வாதை = துன்பம்; பிச்சன் = மருண்டவன்)

... அனந்த் 7-1-2016