Tuesday, April 19, 2016

அம்மையும் அப்பனும்

இன்று பிரதோஷ நன்னாள். மேலும், மதுரை மாநகரில் அருள்மிகு மீனாட்சி- சுந்தரேசர் திருக்கல்யாணத் திருநாள்.

                                                                  திருச்சிற்றம்பலம்
    
                                    Inline image 5                                                         Inline image 3  

                                                         Inline image 4   
பாடலை எளிதாகப் படிக்க: 

<> அம்மையும் அப்பனும் <>

தங்கை தனிலோர் ஓட்டை ஏந்தித்


..தனியாய்த் திரிந்த ஐயன்
...தரணி வாழும் மாந்தர் உய்யத்
... தானோர் சுந்தரனாய்ச்

சங்கம் முழங்கும் மதுரை நகரைச்
... சார இவனழகு
.....தனில்மீன் விழியாள் தனையே இழந்த
...... சரிதம் அறிவோமே!

எங்கண் முனமிவ் இருவர் கூடி
...இலங்கும் எழில்காணில்
.....எங்கும் இவருக்(கு) இணையே இலையென்(று)
.......எவர்தாம் உரையாரே? 

எங்கட் கன்னை தந்தை எனவே
..என்றும் அருள்புரியும்
...இவர்தாள் பணிய விரைவீர் இந்த
... இனிய நாளினிலே!


அனந்த் 19-4-2016

Monday, April 4, 2016

பாரீரே! பாரீரோ

திருச்சிற்றம்பலம் 

Inline image 1

<>  பாரீரே! பாரீரோ <>

வம்மின் உலகீரே! வந்திங்கே தில்லையிலே
..வாமத்தாள் பார்த்திருக்க வாமத்தாள் தனைத்தூக்கி
நம்மை உய்வித்து நமதுபிற வித்துயரை
..நட்டம்உறச் செய்வதற்கு நட்டம்செய் நாதனைக்கண்(டு)
இம்மைப் பயனிதுவே எனஉணர்ந்திவ் வீசனிடம்
..எம்மைக்கா மன்றாடீ என்றுநிதம் மன்றாடி
அம்மை அப்பனிவன் அடியார்கள் பால்காட்டும்
..அருள்திறத்தை அகத்திருத்தி உம்வாழ்வைத் திருத்திடுவீர்*
பாரனைத்தும் படைத்தளித்துப் போக்கிமறைத் தருள்பவனைப்
.. பாரீர்அவ் வைந்தொழிலும் பாங்காய்த்தன் திருநடத்துள்
சேருவணம் ஆடுமிந்தத் தேவைஉம் தேவையெல்லாம்
.. தீருமிவன் தரிசனத்தால் தினமுமவன் திருமுன்கண்
நீரொழுக நீர்நின்று நெக்குருகிப் பெரும்புலியூர்
.. நிமலனிவன் அடியினைஉம் நெஞ்சினடி நிறுத்திடுவீர்
ஓருருவம் இல்லானை ஓர்ந்திடுவீர் உள்ளிருக்கும்
.. உண்மையினைத் தன்நடத்தில் உணர்த்துமவன் உருவினிலே.

அருமறைகள் அறியவொணா அருவபரம் பொருளிங்கே
..அம்பலத்தில் நீர்காண ஆடுகின்றான் மீண்டும்நீர்
கருவறையை நாடாமல் கருத்தனிவன் காத்திடுவான்
..கருணைபொழி திருவிழிசேர் கமலமுகக் கடவுளிவன்
ஒருபதத்தைத் தூக்கிஉம்மை உயர்பதத்தில் ஏற்றிவைப்பான்
..ஓரடியால் அகந்தையினை ஒழித்திடுவான்* முன்னமொரு
தருவடியில் மோனம்வழி சாற்றுபொருள் தருவான்நம்
..தந்தையிவன் தாளடியைச் சார்ந்திடநீர் விரைவீரே.    

(வாமத்தாள்= இடது பாதம், இடப்பாகத்தில் உள்ள உமையன்னை; திருத்துதல் = செவ்வியதாக்குதல்; சீர்ப்படுத்தல்; ஒருபதம்-தூக்கிய திருவடி; ஓரடி= ஊன்றிய திருவடி; இது அடிக்குள் மடக்கு (ஒருசொல் மீண்டும் வருதல்அமைந்த விருத்தப்பா.)


அனந்த் 5-4-2016