Tuesday, January 24, 2017

          திருச்சிற்றம்பலம் 


       <> எழிற் கோலம் <>
பாசம் எரிக்கத் தீயொன்றும் பந்தம் விரட்டத் துடியொன்றும்
நேசம் வளர்க்கக் கரமொன்றும் நிலையில் இருக்கக் காலொன்றும்
பேசற் கரிய பேரருளைப் பக்தர்க் கருள்குஞ் சிதபதமும்
ஈச! உன்றன் எழிலுருவில் இயைந்த வாகுக் கீடுண்டோ? 

<> ஐம்பூதத் தலைவன் <>

மண்ணில் பதமூன்றி மாநீர் தலைதாங்கிப்
பண்ணிசை காற்றில் பரப்பும் உடுக்கையொடு
கண்ணில் கரத்தில் அழலேந்தி ஐயாநீ
விண்வெளியில் நடமாடும் ஐம்பூத வேந்தனன்றே.    

       <> ஆடும் பரமன் <>

காட்டினிலே ஆடிடுவான் ககனவெளி தனில்தனது
நாட்டியத்தின் மெய்ப்பொருளை ஞானியர்கள் அறியும்வண்ணம்
நாட்டிடுவான் அன்பரெல்லாம் நாடுதில்லை அம்பலத்தே
காட்டிடுவான் ஆனந்தக் காட்சியினை எம்மிறையே.  

.. அனந்த்  25-1-2017

Tuesday, January 10, 2017

இரத்தல் ஏனோ?

     திருச்சிற்றம்பலம்
    
<> இரத்தல் ஏனோ? <>

                                                                                                                         



ஐயனே! அகிலமெல்லாம் ஆக்கிக்காத் தழித்தல் எல்லாம்
செய்தது போக மேலே செய்வதற் கேது மின்றிக்
கையிலோர் ஓட்டை ஏந்திக் காளைமேல் ஊரைச் சுற்றும்
கைலைவாழ் ஈசா! உம்மைக் கண்டபேர் பித்தன் என்றே

ஏசினும் மதியாது என்றும் இளநகை முகத்தோடு உள்ளம்
கூசிடா(து)  அலைந்து  பிச்சை கொள்வதன் நோக்கம் யாதோ?
ஆசையாய் மணம் புரிந்த அன்னபூ ரணியுமக்குக்
காசியில் இட்ட சோற்றைக் கணங்களுக் கீந்ததாலா?

அன்றுநீர் உண்ட ஆலம் அளவிலாப் பசியைத் தூண்டிச்
சென்றதன் விளைவோ? அன்றித் தொழுபவர் படைப்ப  தெல்லாம்
என்றும்உம் ஆணைக்கேற்ப ஏகிடும் கிழட்டு மாடு
தின்றிடக் கொடுப்பதாலா?  திருவிளை யாடல் ஒன்றில்

முன்னமோர் வனத்தில் உம்மேல் முனிவர்தம் மனைவி யர்கள்
தம்நலம் இழக்க வைத்த சாகசம் தன்னைப் போல
இன்னுமோர் முறைநி கழ்த்த இச்சையொன் றெழுந்த தாலோ?
அன்னையே பெரியள் என்றே அனுதினம் அவளைப் போற்றும்

பிள்ளைகள் இருவர்உம்மைப் பேணிடார் என்னும் எண்ணம்
உள்ளதோ? இரந்து கிட்டும் உண்டியில் ருசிகண்டீரோ?
வெள்ளியங் கிரியில் நெஞ்சம் வேண்டிடும் உணவில் லாமல்
மெள்ளஅம் மலையை விட்டு வீதியில் மாதர் அட்டும்

உண்டியைச் சுவைக்க ஆசை உள்ளிடை எழுந்த தாலோ?
மண்டையில் கலத்தை ஏந்தி வழிதொறும் உமது பிச்சை
கொண்டிட அருகில் நிற்கும் குண்டன்தன் பசியைப் போக்க
உண்டபின் மிச்சம் ஏதும் உமக்கிலா தான தாலோ?

விண்டுநீர் இவற்றை விட்டு வேறெதும் கார ணங்கள்
உண்டெனின் உரைப்பீர் அன்றேல் உமையவள் பாலும், அஞ்சி
ஒண்டிஉம் சடைக்குள் வாழும் ஒருத்தியின் பாலும் சென்று
கண்டவா றும்மைப் பற்றிக் கதையெலாம் புகல்வேன் இன்றே!

அனந்த்  10-1-2017