<> துணையாய்த் தேர் <>
பாரானை விண்ணானைப் பற்றினோர் தம்குறையைப்
பாரானை முக்கட் பரமனைச் –சீர்க்கொன்றைத்
தாரானைத் தன்னடிசேர் அன்பர்க்கு மீள்பிறவி
தாரானை யாரேத்தா தார்?
வார்கடல் சூழுலகின் மையமெனக் காட்சிதரும்
பேரூரென் றூரார்சொல் தில்லையிலே – பேராளன்
தானந்தம் ஆதியிலாத் தன்மையன் என்றுணர்வோர்
ஆனந்தம் கூறவல்லார் ஆர்?
ஓரடியை மண்ணில்வைத் தோரடியை மேற்றூக்கிச்
சீராக ஆடும் சிதம்பரத்தான் – பேர்சொல்லி
ஆறாய்க்கண் நீர்சொரிய அங்கம் புளகிக்கும்
பேறடைந்தார்க் கார்நிகரா வார்?
ஆரார் அவன்பேர் அறையார் அவனழகைப்
பாராதார் யாரே? பதம்பணிந்து – ஏறேறி
ஊரார்முன் ஊரும் ஒருவனைத் தில்லையெனும்
ஊரானை ஓராதார் ஆர்?
பேரானைத் தோலுடுத்தும் பேயானைப் பித்தனெனும்
பேரானைத் தன்னிலையில் பேரானை – தேராரைச்
சேரானைச் செல்வி சிவகாமி நேயனெனுஞ்
சீரானை உன்துணையாய்த் தேர்.
(தேரார் – தெளிந்த
அறிவில்லாதார்; பகைவர்)