Thursday, November 30, 2017

எது தவம்?

இன்று பிரதோஷ நன்னாள்.

                                திருச்சிற்றம்பலம்

                               <> எது தவம்? <>



 ​

உம்பர் உலகை அடைவனென
.. உஞற்றும் தவமும் உலகுதரும்

இன்பம் பலவும் பெறுதற்கென்(று)
.. இயற்றும் தவமும் தவமல்ல

துன்பம் மலிந்த பிறப்பிறப்புச்
... சுழலை விடுத்துக் கதியடையச்

செம்பொற் சுடராய்த் திகழ்வோன்தாள்
.. தேடல் ஒன்றே தவமாமே.
  
                    
தவத்தின் உண்மைப் பயனடைந்தோர்
..தம்முள் உறையும் பரமறிவார்

அவத்தை விழிப்பு கனவுள்ளும்
.. ஆழ்ந்த சுழுத்தி அதனுள்ளும்

சிவத்தி னின்று தாமகலாச்
.. சித்தில் நிலைப்பார் சுழன்றுவரும்

பவத்தை வென்றோர் அவர்பெருமை
.. சாற்றல் எவர்க்கே சாத்தியமே.


​                  

கோவணம் தரித்துப் பெருந்துன்பம்
.. கொளினும் உடலைக் குறியாது

யாவரும் வியக்க அருணையிலே
.. அமர்ந்த முனிவர் ஆர்நானென்(று)

ஓவா துள்ளே தேடெனவே
.. உபதே சித்து வானுறையும்

தேவரும் அறியா அறிவொளியில்
... திளைத்தார் அதுமெய்த் தவமாமே.


... அனந்த் 1-12-2017

Tuesday, November 14, 2017

மறக் கருணை


           <> மறக் கருணை <>



(வாய்பாடு: மா மா காய் மா மா காய்)

அழித்தல் உன்றன் தொழிலென்றிங்(கு)
.. அனைவர் சொல்லக் கேட்டுள்ளேன்

விழிப்பில் தொடங்கித் தொலைவிண்ணில்
.. மீன்கள் மறையும் வேளைவரை

பழிக்கும் செயலே புரியுமென்றன்
.. பாவச் சுமையை நீதயைசெய்(து)

அழிக்கின் உலகோர்க் குன்தொழிலுள்
.. அடங்கும் கருணை விளங்கிடுமே.

                       ***********

தோன்றல் நிலைத்தல் அழிதலெனும்
.. சுழலில் சிக்கி மாயையுள்வேர்

ஊன்றி அவருள் உறைமெய்யை
.. உணரா தென்றும் உழல்வதுபோல்

தோன்ற வைக்கும் உன்ஜாலம்
.. தெரிந்தோர்க் குண்டோ பிறப்பிறப்பு?

ஆன்ற அந்த அறிவையெனக்(கு)
.. அருளும் நாளும் எந்நாளோ?

                      ***********

ஒட்டி உன்னோ டுறைமங்கை
.. உன்றன் இடக்கை ஏந்தியதீச்

சட்டி தன்னை விடுத்துச்செந்
.. தாமரை தாங்கி நிற்கையிலுன்

இட்டம் போல அழிக்கும்வினை
.. எவ்வா றாற்று வாய்அறியேன்

நட்டம் பயிலும் நாத!உனை
.. நன்க றிந்தார் எவருளரே!

                      ***********
செய்தற் கான தொழிலொன்றைச்
.. சீராய் இறுதி வரைஆற்றல்

வையத் தோர்க்கு வழங்கும்நல்
.. வார்த்தைஇங்கு நீஎன்னை

உய்விப் பதற்குத் தொடங்கிவைத்த
.. உன்றன் தொழிலை முடித்திலையேல்

ஐயஎனக்குக் கதிதரஇங்(கு)
.. ஆருள் ளார்?யான் என்செய்வேன்?

                      ***********

(வாய்பாடு: காய் மா காய் மா மா காய்)

அளித்தாலும் என்னை அழித்தாலும்
.. அருள்தந் தாலும் தராயெனினும்

களித்தாடும் ஞான நடத்தோய்!உன்
.. கழலின் நிழல்விட் டகலாமல்

விளித்திடுவேன் உன்றன் திருநாமம்
.. வினையேன் பாலுன் திருவிழிகள்

துளியேனும் வீழும் வரைஎன்னைத்
.. துரத்த முயலல் ஆகாதே.

(படம்: “நடராசப் பெருமான்”, திருவாவடுதுறை ஆதீன வெளியீடு, 2001)

.. அனந்த் 15-11-2017 பிரதோஷ நன்னாள்.