Sunday, October 21, 2018

எந்நாளோ?





                      
 திருச்சிற்றம்பலம்




















                    <> எந்நாளோ? <>

பாடு பட்டுச் சேர்த்த பொருளுமென்றன்
.. பதவி மக்கள் சுற்றம் என்றிவற்றைத்
தேடிப் பெற்ற பேறென் றெண்ணிவந்தேன்
.. தீயும் பேயும் உலவும் காட்டினில்நீ
ஆடும் போதுன் முகத்தில் நிலவுகின்ற
.. அழியா நிறைவின் அழகைக் கண்டபின்னர்
ஈடிங்(கு) இல்லை அதற்கென் றுணர்ந்துகொண்டேன்
.. ஈசா! உன்பால் வருநாள் எந்நாளோ? 


மண்ணில் பிறந்து வளர்ந்து மூப்பெய்தி
.. மாளும் தொழிலே வழக்காய்க் கொண்(டு)உன்றன்
எண்ணம் நெஞ்சில் எழுதற் கிடமளியா
.. என்னை உன்றன் திருமுன் னேநிறுத்தி
வெண்ணீ றணிய வைத்துன் நாமத்தை
… வாயால் செப்ப வகைசெய் தருவியெனக்
கண்ணில் நீரை வழிய வைத்(து)அதிலென்
.. கருமம் கரைய வைப்ப தெந்நாளோ?

சற்றே வளைந்த இடத்தாள் மேல்நோக்கத்
.. தரையில் வலக்கால் அசுரன் மேல்பதியப்
பற்றும் இதனை என்றோர் கரம்தாளின்
.. பக்கம் சாய மற்றோர் கரமருள
ஒற்றைக் கையில் உடுக்கை எழுப்பிடும்நல்
.. ஒலியின் கதியோ(டு) உமைமேற் பார்வையிடச்
சுற்றும் அடியார் துதிக்க நீதந்தோம்
.. தோமென் றாடல் காண்ப தெந்நாளோ?


அனந்த் 22-10-2018 (ஸோமவாரச் சிறப்புப் பிரதோஷ நன்னாள்)

Friday, October 5, 2018

அருள் விளக்கம்

                 
                           திருச்சிற்றம்பலம்

 

                 <>   அருள் விளக்கம் <>

தூய ஞானமாம் வெளியினில் துலங்கும்
.. துரியசித் தானதோர் பிரமம்
….. தொழும்பருக் கிரங்கிச் சிற்சபை தன்னில்
……. தூக்கிய காலொடும் தோன்றி

மாயம் ஈதென மண்ணொடு விண்ணும்
……. மற்றபல் உயிரினம் யாவும்
……… வலதுகைத் துடியொலி வழிபடைத்(து) யாவும்
……….. வளர்ந்திட ஒருகரம் உதவ,

காயம் நீக்கவோர் கரத்திலே தீயும்
கரந்திட வலப்புறக் காலும்
…… கருணையின் மிகுதியால் தூக்கிய தாளே
……… கதியெனக் காட்டுமோர் கரமும்

ஆய உருக்கொடு அம்பலந் தன்னில்
ஆடிடும் அழகினை நித்தம்
…… ஆழ்ந்துதம் உளத்தினில் இருத்துநல் அடியர்
…….. அகத்திலே நிலைக்கு(ம்)மெய் யறிவே.

(ஐந்தொழில்: உடுக்கை - ஆக்கல்;  அபய கரம் - காத்தல்; இங்கு,  அது அடியார்க்கு அருளும் தூக்கிய இடக் காலைச்  சுட்டுவதாகவும் குறிக்கப்பட்டது ; தீ - அழித்தல்;  வலக்கால் - கரத்தல் (மறைத்தல்); இடதுகால் - அருளல்.)  

அனந்த் 
6-10-2018 (சனி மஹாப் பிரதோஷம்)