திருச்சிற்றம்பலம்
<> பெருந்தவசி <>
அருந்துவது நஞ்சைப் பின் ஆடுவதோர் நடத்தை;
பொருந்துவது பெண்ணை முன் பொசுக்கியது மதனை
விருந்துசிறு பிள்ளை பின் விளக்குவது மறையை
பெருந்தவசி என்றே ஊர் பேசுவதேன் இவரை?
(சிறுபிள்ளை= சிறுத்தொண்ட நாயனாரின்
புதல்வன் சீராளன்)
சிறியதொரு பிள்ளை பாப் புனைந்துவியப் பூட்டும்
குறியெதுவு மின்றிக் கால் கொண்டுதைத்த வேடன்
அறிவரிய பேற்றைத் தான் அடைந்திடலு மாகும்
நெறியறிவி லேன்என் கல் நெஞ்சினுளும் வாழும்.
(சிறியதொரு பிள்ளை = திருஞானசம்பந்தர்)
காசுபண மில்லான்
போல் கையில்தலை
யோட்டைக்
கூசலிலா தேந்தி ஊண் கொண்டிரக்கும் கூத்தன்
வாசுகியைப் பூணாய் இடை
வனைந்துலகோர் கூறும்
ஏசலெலாம் பாட்டாய்
இவன் ஏற்றுமகிழ் வானே.
சிவனைநினை யாமல் ஓர் அரைநொடியும்
வாழேன்
அவனழகை நித்தம் என் அகமதனில் காண்பேன்
தவமெனஎந் நாளும் பூந் தாளடைந்து வாழ்வேன்
பவமெனுமொர் பாதை என் பால்வரலும் ஆமோ?
(பாதை = உபாதி, வேதனை)
.. அனந்த்
23-12-2019 கார்த்திகை சோமவாரப் பிரதோஷம்