Monday, January 25, 2021

ஓரடி மேல்வைப்பு

                                திருச்சிற்றம்பலம் 


 



      






<> ஓரடி மேல்வைப்பு <>

 

ஈரடியில் ஓரடியை நேரடியாய்ச் சிரத்துயர்த்திப்

பாரடியோ என்றுமுனம் பார்வதிக்குக் காட்டியக்கால்
சீரடியார் தாம்வணங்க ஓரடியே இணையடிக்கு
நேரடியென் றானதுவோ? யாரடிஅச் சூதறிவார்?
ஓரடியார் தம்முள்ளே ஒளிருமடி ஒன்றேஎன் றுணர்வார் தாமே. 

(ஓரடியார் ... தாமே:  உள்முகமாய் ஆழ்ந்து சிந்திக்கும் அடியவர்கள் தம்முள் ஒளிரும் பரமனின் அடி இரண்டற்றதான மெய்ப்பொருள் ஒன்றேயாம் என்று உணர்வார்கள். இப்பாடல், தரவுகொச்சகக் கலிப்பாவின் மேல் ஓரடி வைத்த யாப்பில் அமைந்தது )

அனந்த் 26-12021 பிரதோஷம் 


Wednesday, January 20, 2021

செவியேறுமோ?

                                      திருச்சிற்றம்பலம் 



         


                                <> செவியேறுமோ? <> 

    மானொரு கையில் ஏந்தி மதிபுனல் தலையில் தாங்கி 
    .. வாய்பகு அரவம் ஒன்றை மார்பினில் அணியாய்த் தாங்கி 

    வானெழில் மங்கை நல்லாள் வாமபா கத்தில் தாங்கி 
    .. வானுறை தேவர் பூணும் மணிமுடி தாளில் தாங்கி தீனனென் புன்மைச் 

    சொல்லை இருசெவி ஒன்றி லேனும் 
    .. சீறிடா தேற்கும் இன்றோ நாளையோ எனவே நம்பி

     நான்நிதம் உருகி நிற்றல் நாடிடும் அடியார் முன்னம் 
    .. நர்த்தனம் ஆடும் தில்லை நாதன்என் றறிவான் கொல்லோ?.


(முன்னமுள்ள 4 வரிகளில், ஏந்தி, தாங்கி என்பன பெயர்ச்சொற்களாகப் பயிலும்; பதின்சீர் விருத்தம்அரையடி வாய்பாடு: கூவிளம் மா மா விளம் மா மா)

... அனந்த் 9-1-2021 பிரதோஷம்