Tuesday, February 23, 2021
Monday, February 8, 2021
நடிப்பு
திருச்சிற்றம்பலம்
<> நடிப்பு <>
போதும் மதியுமணி பொன்னம் பலத்தரசே
ஏது குறையுமக்கென் றிவ்வாறுஎப் – போதுமோர்
காலை மடக்கிநின்று கட்டப் படுவதுபோல்
நாலுபேர் முன்னால் நடிப்பு?
************
<> புகழில் பங்கு <>
தொண்டைக் குழியில் திரண்டுநிற்கும் நஞ்சுநின்
தொண்டர்க் கருள்திறத்தின் சின்னமெனக் – கண்டவர்அக்
கண்டவிடச் சீர்பற்றிக் கண்டவிடம் பேசிநிற்பர்
உண்டதில்காண் ஓர்பங்(கு) உமைக்கு.
(பொருள் விளக்கம்: அமரரையும் அசுரரையும் ஆலகால விடத் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய சிவபெருமானது கழுத்தில் தங்கிய விடம் அவனது அருளின் மேன்மையைச் செப்புகின்ற சின்னம் என உணர்ந்த அடியவர்கள் பிறருக்கு அதுபற்றிப் பொது இடங்களில் கூறிச் சிவனைப் புகழ்வார்கள். அந்தப் புகழ்ச்சியில், அக்கொடிய விடம் பெருமானின் மேனி முழுது பரவாமல் அவன் கழுத்தளவில் தங்கவைத்த உமையம்மைக்கு ஒருபங்கு உண்டு என்று ஐயனுக்கு நினைவுபடுத்துவதாக அமைந்தவாறு.)
************
<> உன் பிழை <>
ஏட்டை எடுக்கவைத்தாய் கோலொன்றை என்கரத்தில்
பூட்டி எழுதவைத்தாய் போற்றியுனைப் – பாட்டையிட்ட
பின்னரதில் ஏதும் பிழையிருப்பின் ஐய!அஃது
உன்னதல்லால் என்னதா மோ?
... அனந்த் 8-2-2021 பிரதோஷ நன்னாள்.