திருச்சிற்றம்பலம்
1.
நடமாடி மகிழ்ந்திடுவாய் நானோ நன்றாய்
.. நடமாட இயலாமல் நலிந்து நிற்பேன்
இடமாக இறைவியைநீ ஏற்பாய் நானோ
.. இடமாகத் தீமைக்கே ஈவேன் நெஞ்சை
விடமுண்டு புரப்பாய்நீ வையம் எற்கும்
.. விடமுண்டு செயலில்ஊர் வெறுக்கும் வண்ணம்
உடனிந்த முரண்நீக்க விரைந்தே வந்துன்
.. உடன்நானும் ஒன்றிநிற்கச் செய்வாய் ஐயே!
(நடமாடுதல் = நடனம் ஆடுதல், கூத்தாடுதல், நடந்துகொள்ளல்; நலிதல் = தவறுதல், சரிதல், வருந்துதல், அழிதல், மெலிதல்; எற்கும் = எனக்கும்; ஒன்றுதல்= பொருந்துதல், கூடுதல், நிலைபெறுதல். இச்செய்யுள் மடக்கு வகையைச் சேர்ந்தது.)
2.
வெண்ணீற்று மேனியில் கரியுரியைப் போர்த்திடுவாய்
தண்ணீரைத் தாங்கித் தழலையும்கை ஏந்திடுவாய்
கண்மூன்றும் மூடிக் கைச்சாடை பேசவைப்பாய்
எண்ணில்இம் முரணன்றே எனையுன்பால் ஈர்த்ததுவே.
...அனந்த் 26-6-2022