திருச்சிற்றம்பலம்
<> உபதேசிகன் <>
தானனா தந்தன தானனா தந்தன
தானனா தந்தன தானனா தந்தன
தானனா தந்தன தனதானா
போகுநாள் வந்திடு காடுவா வென்றிடு
.. போதிலே யுன்பத மேயுளே நின்றிடு
....... பேறுநீ தந்திட மறவாதே
வேகுகா யந்தனை வேகமே வெந்தழன்
.... மீதிலே யுந்திடு வேளைநீ றென்றுன
....... மேனியே யண்டிட விழைவேனே
பாகுநேர் செஞ்சொலள் பாகனே ஐங்கரன்
.... பாரெலாந் தந்தையர் பேருளே கண்டவவ்
....... வாறுயான் கண்டிட வருளாயோ
மாகமா யன்றொரு நாளிலே நின்றுப
.. தேசமே தந்துமெய் யோதியா முய்ந்திடு
….. மாறரு டந்ததை நினைவேனே.
பதம் பிரித்து:
போகுநாள் வந்து இடுகாடு வா என்றிடு
.. போதிலே உன்பத மேஉளே நின்றிடு
....... பேறுநீ தந்திட மறவாதே
வேகுகா யந்தனை வேகமே வெந்தழல்
.... மீதிலே உந்திடு வேளை நீறு என்று உன
....... மேனியே அண்டிட விழைவேனே
பாகுநேர் செஞ்சொலள் பாகனே ஐங்கரன்
.... பார்எலாம் தந்தையர் பேர் உளே கண்ட
....... அவ்வாறு யான் கண்டிட அருளாயோ
மாகமாய் அன்று ஒரு நாளிலே நின்று
.. உபதேசமே தந்து மெய் ஓதி யாம் உய்ந்திடுமாறு
….. அருள் தந்ததை நினைவேனே.
(உன = உனது; இரண்டாம் அடியின் பொருள்: எனது மேனியை உற்றார் விரைவில் நெருப்பின் மீது தள்ளிடும் போதினில், என் உடல் சாம்பராய் மாறுகையில் அது இடுகாட்டில் நடம் புரியும் உன் மேனியை அடைய விரும்புவேன்.)
அனந்த் 9-8-2022