திருச்சிற்றம்பலம்
<> கழலிணை காட்டிடுவாய் <>
விதியொன்றும் அறியாமல் வாழ்க்கையெனும் படகோட்டும்
.. விளையாட்டில் நான்இறங்கி விட்டமறு கண(ம்)முதலாய்
அதிவேக நதியதனுள் சதிசெய்யும் சுழல்களுடன்
.. அரைநொடியில் என்ஓடம் அமிழும்நிலை கண்(டு)என்றன்
உதிரமெலாம் உறைந்துவிட உள்ளமெலாம் நடுநடுங்க
.. ஒருவழியும் இல்லாமல் உயிருடல்விட்(டு) ஓடுமுன்னம்
கதியெனஇவ் வேழைமுன்நின் கழலிணைகள் காட்டியெனைக்
.. காத்திடுவாய், காத்திடுவாய், கயிலைமலை வாழ்இறையே!
(யாப்பு: எண்சீர் ஆசிரிய விருத்தம். 8-காய்ச்சீர்)
அனந்த் 24-1-2013