Tuesday, January 8, 2013

8-1-2013 கயிலைக் காட்சி

இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்  
         





<கயிலைக் காட்சி <>

அன்னையின் மடியிலே அமர்ந்திடும் முருகனை அன்புடன் நோக்கி நீயும்
.. அறுமுகா! வாவென அழைத்திட அவனுனை அணுகிமேல் அணைக்க, முத்து

மின்னிடும் மூவிரு முடிகளை மோந்துநீ முத்தமிட் டுவகை பொங்க,
.. ”விழிவழி வந்தஎன் மைந்த!நீ வாழ்க”வென் றுரைத்திடல் கேட்(டு) அவன்றன்

முன்னவன் வேகமாய் முந்திவந் துன்மடி மேலமர் வாகு கண்டு
.. முறுவல்செய் அன்னையின் முகத்தொளிர் அழகிலே மூவரும் மயங்கி நிற்கும்


இன்னதோர் காட்சியென் இதயமாம் குகையினில் என்றுமே நிலைக்க வைப்பாய்

.. ஈசனே! ஏழையும் இமகிரி ஏறுமா(று) இன்னருள் செய்த கோவே!


வாகு= இங்கு, சாமர்த்தியம்; மேலும்: அழகு, ஒழுங்கு
முதல் நான்கு அடிகள் ஆதிசங்கரர் அருளிய ”ஸுப்ரம்மண்ய புஜங்கம்” 

என்னும் துதியில் உள்ள (இஹாயாஹி, ஸுதாங்கோத்பவ என்று தொடங்கும்) 

இரு கண்ணிகளை அடிப்படையாகக் கொண்டவை.
யாப்பு: பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்; 1,3,8,10 சீர் மோனை

ஒலிப்பதிவு: http://raretfm.mayyam.com/ananth/Kayilaik_kAtchi.mp3


..அனந்த் 8-1-2013


No comments: