Wednesday, March 27, 2013

* நடுநிலை காப்போன் *

திருச்சிற்றம்பலம்


                                                              

            நடுநிலை காப்போன்



 




விட்டுக் கொடுத்தாய் இடப்பாகம்
…..விளங்கும்உமையாள் தனக்குப்பின்
கட்டுக் கடங்காது ஓடிவந்த
……கங்கைப் பெண்ணைச் சடையில்வலம்
இட்டவ் விருவர் தம்மையுமே
....இணையாய் வைத்த சமர்த்தைப்போல்
நட்டம் தனிலும் கால்மாற்றி
…..நாத! அவரை நயந்தனையோ?
*
திட்டம் எதுவாய் இருப்பினுமிச்
…..சிறியேன் தில்லை, மதுரையிலே
கிட்ட இருந்துன் நடம்காணக்
…..கிருபை செய்தாய்; பிறப்பிறப்பாம்
வட்டச் சகடம் தனில்பட்டு
…..வாடா வகைஉன் அடியவர்க்குக்
கிட்டும் எனும்மே லோர்சொல்லைக்
…..காத்தல் உன்றன் கடன்,ஐயே!
சமர்த்து= பலம், ஆற்றல்; நயத்தல் = இங்கு, மதித்தல், நீதிசெய்தல் (க. அகராதி; பிற பொருள்கள்:ஆசைப்பெருக்கம், சினேகித்தல், பின்செல்லுதல்,விரும்பல்)
அனந்த்
24-3-2013
குறிப்பு:முதல் பகுதியில், உமையன்னையைத் தமது இடப்பக்கத்திலும் கங்கையன்னைத் தமது வலது பக்கத்திலும் சிவபெருமான் வைத்துள்ளதை, அவர் தில்லையில் இடது தாளையும் மதுரையில் (ராஜசேகர பாண்டியனுக்காக) வலது காலையும் தூக்கி (கால்மாற்றி) ஆடிய நிகழ்ச்சியோடு இணைத்தது தற்குறிப்பேற்றம்.
 

Wednesday, March 20, 2013

இசைதல் வேண்டும்

இன்று மஹாசிவராத்திரிக்கு முந்திய சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
 
 
 
<> இசைதல் வேண்டும் <>
 
 
திருச்சிற்றம்பலம்
 
குப்பை மலிந்த என்நெஞ்சக்
... குடிலில் குறைகள் பலவுண்டு
......கொடுமை புரியும் அறுவருண்டு*
.........குடிகொள் அதனுள் நீஎன்னல்
தப்பென் றறிவேன் எனினுமொரு
...தந்தை மைந்தன் அகந்தன்னில்
…..தங்க மறுத்தல் அழகாமோ?
.........தயைசெய்(து)என்றன் அழைப்பினையேற்(று)
எப்போ தும்மென் னுள்ளிருக்க
...இசைதல் வேண்டும் உன்திறன்முன்
….இல்லத் துறையும் பகையொடுமற்(று)
.........எல்லாத் துன்பும் அகலும்ஐயே!
வெப்பம் அறியா வெற்பமரும்
...விமலா!விதியோ(டு)அரியறியா
......விகிர்தா!என்னைக் காத்தருள
.........விரைந்து வருகை தருவாயே!
அனந்த் 9-3-2013
*ஆறு பகைவர்கள்: காமம், கோபம், கருமித்தனம்(லோபம்), மோகம், ஆணவம்(மதம்), பொறாமை(மாச்சர்யம்) என்னும் தீயகுணங்கள்.; விதி = பிரமன்
யாப்பு: பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்; அரையடி: மா மா காய் மா மா காய்; அடிமுதற்சீர்: தேமா.