இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> வழிகாட்டும் வண்மை
<>
மறைகளும் உபநிட தங்களும் மானிடர்
.... மனத்தினால் உன்ன வொண்ணா
.. வத்துவாய் விளங்கிடும் சித்துநீ என்றுனை
….
வருணனை செய்வ தாலே
அறியவே இயன்றிடான் இவனென எம்மனோர்
.. அடைந்திட முயற்சி செய்யா(து)
... அழிந்திடல் தவிர்த்திட ஐய!நின் திருவுளத்(து)
..... அளவிலா அன்பி னாலே
எறிதிரை உலகெலாம் இயக்கிடும் ஈசன்நீ
… என்பதைக் காட்டும் வண்ணம்
…. ஏந்துவாய் கைகளில் இரைபறை ஒன்றையும்
….. எரியழல் இவற்றினோடு
மறியொரு கரத்திலும் மற்றொரு கரத்திலே
… வரம்தரும் சின்ன மேந்தி
வருபவர்க்(கு) உன்பதம் வழியெனக் காட்டுமுன்
… வண்மையை வழுத்து வேனே.
பொருள் விளக்கம்:
மனிதரின் அறிவிற்கெட்டாத
பரம்பொருளாவான் சிவபெருமான் என வேதங்கள் கூறுவதைக் கேட்டு, என்போன்றோர் அவனை அறியவும்
அடையவும் முயலாமல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று திருவுள்ளம் கொண்ட அப்பெருமான்,
நடராசத் திருவுருவம் தாங்கி நம் கண் முன்னே காட்சி தந்துள்ளான். அவ்வடிவில், அவன் கைகளில்
தாங்கியுள்ள உடுக்கை, தீ போன்றவற்றால், தான் நம் கண்முன் தெரியும் உலகை (படைத்தல்,
காத்தல் அழித்தல் தொழில்கள் மூலம்) இயக்குபவன்
ஆவான் என்று தெளிவுறுத்துவான். அவ்வாறு அவனை அறிவதற்குத் தன் திருவடிகளைப் பற்றுவதே
எளிய வழி என்றும் ஒரு கையினால் (வலப்புறம்
உள்ள அபயகரத்தால்) அவன் நமக்குக் காட்டுகிறான்.
குறிப்புரை:
எல்லாம் கடந்தவன் (நிர்க்குணப் பிரமம்)
என்று கூறப்படும் கடவுளே பிரபஞ்சங்களாயும் அவற்றில் உள்ள தாவர ஜங்கமப் பொருள்களாகவும்
விளங்குகிறான். இப்படி அவனைப் புரிந்துகொள்ள ஏதுவாகத் தானே ஒரு வடிவம் கொண்டு (ஸகுணப்ரம்மம்)
நமக்குக் காட்சி தருகிறான். அவ்வடிவை வழிபடுவதன் வழியாக நாம் நிர்க்குணப் பிரமத்தை
அறிந்து பிறப்பிறப்புச் சுழலிலிருந்து விடுபடலாம்.
No comments:
Post a Comment