Monday, June 29, 2015

அவன் கோலம்

            திருச்சிற்றம்பலம்
















            <> அவன் கோலம்  <>
 
தேகம் முழுதும் சாம்ப லுண்டு சேரக் கணங்கள் திரளு முண்டு
... தேர்ந்து பூண எலும்பு முண்டு சிகையில் அணிய எருக்கு முண்டு

போகும் இடத்தில் காடு முண்டு பூத முண்டு பேயும் உண்டு 
... போற்றிப் பாடக் கிழமு முண்டு புலியு முண்டு அரவு முண்டு 

வேகும் உடலம் பலவு முண்டு விண்ணில் சேரும் கூட்ட முண்டு
.. வேதம் ஓதும் நாத முண்டு வேறு வகையில் ஒலியு முண்டு

ஆக இவனை அடைய வழியும் யாதென் றுள்ளம் அயரும் வேளை
... அகத்தில் ஆடிக் காட்ட லுண்டு அதனில் ஆழ்த்திப் பார்த்தல் உண்டே!

(கிழம் = முதிய உரு எய்திய காரைக்கால் அம்மை; புலி= வியாக்கிரபாத (புலிக்கால்) முனிவர்; அரவு = பாம்பின் உடல் கொண்ட பதஞ்சலி முனிவர்)

..அனந்த்
29-6-2015

Monday, June 15, 2015

உதவுவையே

இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்


<> உதவுவையே <>




 

வெள்ளை மனத்துடன் மேதினி தன்னில் விழுந்தபினர்
மெள்ள அதனுள் விடமென ஆசை விதைத்துலகம்
எள்ளும் வகையில் இழிந்தவன் ஆயினன் ஈச!உனை
உள்ள வழியொன்(று) உரைத்திடின் உய்வேன் உதவுவையே!

கொடுத்தாய் குறைஇலாத் தேகமும் வாழ்வும் கொடியனதைக்
கெடுத்தேன் எனினும் குணம்மிகு நல்லோர் குழுநடுவில்
விடுத்தாய் அதனையும் வீணடித் தேன்இனி மேலுமெனைத்
தடுத்தாட் கொளவோர் வகைதெரி யாதுநீ தவித்திடுமே

பொய்யே துணையெனக் கொண்டவிப் பாவி புனிதனுனை
ஐயே! எனவே அழைத்திடும் அந்த அருகதையை
மெய்யாய் அடைய விளங்குபொன் அம்பல மேடையிலுன்
ஒய்யா ரநடம் ஒருமுறை காண உதவுவையே.

.. அனந்த் 13-6-2015