Wednesday, July 29, 2015

குணமிலியைக் கொள்வையோ?

                                                            திருச்சிற்றம்பலம்


                                 <> குணமிலியைக் கொள்வையோ? <>


ஏதமில் குணத்தினர் பேதமில் மனத்தினர் என்றுமுன் நினைவின் மாறார்
... இத்தகை யாருடன் இனிதுநீ இருக்கையில் அவர்க்குள தகுதி தன்னில்
 
ஏதுமில் லாதஇவ் ஈனனை, அசடனை இரக்கமில் நெஞ்சன் என்னை
.. என்னவன் என்றுநீ ஏற்றிடென்(று) எங்ஙனம் இறைஞ்சநான் துணிவன் ஐயே!

சீதமார் பொழில்நிறை கழுமல வளநகர்ப் பாலகன் பால ருந்தச்
.. செய்தவர்க் குதவினை சிறியனேன் வெறும்மனப் பால்குடித் தேங்கி நிற்பேன்

யாதுநீ செய்தெனை ஆட்கொளும் என்பதை அரைக்கணம் சிந்தியாயோ?
.. ஆண்டவா! தில்லைவாழ் தாண்டவா! நின்பதம் அன்றியோர் சரணி லேனே!

.. அனந்த் 29-7-2015

Sunday, July 12, 2015

எல்லையிலா அருள்

               திருச்சிற்றம்பலம்  


        
















<> எல்லையிலா அருள் <>

எங்கோ தொலைவில் உளன்என்னா(து)
.. இறையே! என்றன் கைப்பற்றி
மங்காப் புகழ்சேர் தலங்களுக்கு
... வலியக் கூட்டிச் சென்றாங்குன்
தங்கச் சுடராம் திருவுருவைத்
.. தரிசித் திடநீ வைத்திட்டாய்
மங்கை உடன்ஓர் விடைமீதூர்
.. மன்னே! உன்றன் அருளென்னே!

எங்கோன் எனவும் எழிலாரும்
.. இடத்தாள் தூக்கி! எனவுமுனைக்                    
             
கங்குல் பகலாய் நினைவிருத்திக்
.. கழறும் அடியார் நடுவிலெனைத்
தங்க வைத்துத் தாய்தனது
.. சவலைக் குழவி தனைநோக்கும்
இங்கி தத்தோ(டு) எனைக்காத்தாய்
.. ஈசா! உன்றன் பரிவென்னே!

அங்கம் தளர்ந்து வலுவுமிழந்(து)
.. அடியேன் காலம் முடிகையில்என்
பங்கிற்(கு) உன்றன் திருநாமம்
.. பகர ஆற்றா அந்நிலையில்
 இங்கே உள்ளேன் என்றுனையென்
.. இதயந் தனிலே காட்டிஎரி
பொங்கும் காட்டில் நீநடனம்
.. புரியும் அழகைக் காட்டுவையோ?

.. அனந்த் 13-7-2015