Sunday, July 12, 2015

எல்லையிலா அருள்

               திருச்சிற்றம்பலம்  


        
















<> எல்லையிலா அருள் <>

எங்கோ தொலைவில் உளன்என்னா(து)
.. இறையே! என்றன் கைப்பற்றி
மங்காப் புகழ்சேர் தலங்களுக்கு
... வலியக் கூட்டிச் சென்றாங்குன்
தங்கச் சுடராம் திருவுருவைத்
.. தரிசித் திடநீ வைத்திட்டாய்
மங்கை உடன்ஓர் விடைமீதூர்
.. மன்னே! உன்றன் அருளென்னே!

எங்கோன் எனவும் எழிலாரும்
.. இடத்தாள் தூக்கி! எனவுமுனைக்                    
             
கங்குல் பகலாய் நினைவிருத்திக்
.. கழறும் அடியார் நடுவிலெனைத்
தங்க வைத்துத் தாய்தனது
.. சவலைக் குழவி தனைநோக்கும்
இங்கி தத்தோ(டு) எனைக்காத்தாய்
.. ஈசா! உன்றன் பரிவென்னே!

அங்கம் தளர்ந்து வலுவுமிழந்(து)
.. அடியேன் காலம் முடிகையில்என்
பங்கிற்(கு) உன்றன் திருநாமம்
.. பகர ஆற்றா அந்நிலையில்
 இங்கே உள்ளேன் என்றுனையென்
.. இதயந் தனிலே காட்டிஎரி
பொங்கும் காட்டில் நீநடனம்
.. புரியும் அழகைக் காட்டுவையோ?

.. அனந்த் 13-7-2015

No comments: