திருச்சிற்றம்பலம்
<>
காரணம் சொல்வீர் <>
தலையிலும் இடப்பா கத்தும்
.. தாங்கிடும் மாதர் தம்மால்
நிலையிலா தங்கு மிங்கும்
.. நித்தமும் ஆடி ஓடி
அலையும்உம் பாடு கண்டோ
.. ஆனையின் முகத்துப் பிள்ளை
உலைவிலா மாணி யாக
.. உறுதிகொண் டனனோ சொல்வீர்!
(உலைவிலா மாணி = அலைச்சல்/வருத்தம் இல்லாத பிரமசாரி)
முன்னம்நீர் விசய னோடு
.. மோதிடற் காக வேடன்
என்னுமோர் வேடம் தாங்கி
.. இருக்கையில் கூட வந்த
அன்னையின் வேட்டு வச்சி
.. அழகுருக் கண்ட தாலோ
சின்னவன் தானும் வேடச்
.. சிறுமியை மணந்தான் சொல்வீர்?
மின்னலாய் மறையும் வாழ்வை
.. விடுத்திட வேட்கை இன்றிப்
பொன்னொடு மனையும் மாடும்
.. புகழையும் வேண்டி மாந்தர்
உன்னிடம் வருதல் கண்டோ
.. உமையவள் பாக ரே!நீர்
என்னவோர் அணியும் பூணா
.. ஏழையாய்க் காண்பீர் சொல்லும்!
அனந்த் 20-3-2016
--------------