இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> உய்யச் செய்வாய் <>
செய்குவன் பிழைகள் கோடி சிறிது மோர் தயக்க மின்றிப்
பெய்குவன் சுடுசொல் என்னைப் பே ணுவோர் மேலும்; இன்று
கைகுவித் துன்முன் வந்து கதறினே ன் கனிந்து நோக்கின்
உய்குவன் உடன்என் அத்தா! உயர்தி ருத் தில்லை யானே!
வழியிதுஎன்(று) அறியேன் மற்ற மனிதர்தம் துணையும் நாடேன்
குழியினில் வீழ்வேன் காக்கக் கூப்பிடேன் வெளியார் தம்மைப்
பழியெலாம் பிறர்மேல் வைப்பேன் பரமனே! உன்பேர் சொல்லி
விழிபுனல் சோர வந்தேன் விலக்கிடா தருள்செய் வாயே
திண்ணிய நெஞ்சில் ஈரத் திவலையும் இல்லா(து) என்றும்
எண்ணுவேன் என்னை மட்டும் இம்மியும் பிறர்க்கொன்(று) ஈயேன்
பண்ணுமென் செயல்கள் யாவும் பா பமென் றுணர்ந்தின்(று) உன்னை
நண்ணினேன் நாதா! என்னை நல்லவன் ஆக்கி டாயோ?
உனக்குள பெருமை மேன்மை ஒன்றுமே அறிந்தி லேனாய்
எனக்கென மட்டும் வாழ்ந்தேன் ஈனனென்(று) உணரா(து) இன்று
கனக்குமென் அகந்தை யாலே கண்டபல் துன்பந் தாங்கா(து)
அனற்கரம் கொண்டோய்! உன்னை அணுகினேன் காத்தி டாயோ?
காப்பதில் உன்னை விஞ்சும் கடவுளர் இலரென்(று) உன்றன்
பூப்பதம் சேர்ந்தோர் சொல்லைப் புத்தியில் இருத்தி நானோர்
பாப்புனைந்(து) இன்று வந்தேன் பார்த்தருள் புரிவாய் தேகம்
தீப்புகும் முன்னம் உன்றன் திருவருள் தீண்ட வைப்பாய்.
.. அனந்த் 17-6-2016