Wednesday, June 1, 2016

அரியும் அரனும் அவன்

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

 

<> அரியும் அரனும் அவன் <>


அரியான் அவனை அறியான் பவத்தை

அரியான் அரியான் அறியான் – அறைவேன்

அரியான் அலன்றன் அடியார்க்(கு) அவரைப்

பிரியான் பெரியான் அவன்.


சிவன்:

எளிதில் எட்டிட இயலாதவன்*; அவனை அறியாதவனது  பவம்  (பிறப்பு-இறப்பு) என்னும் நோயை அழிக்கமாட்டான்** (அறிந்தோரின் பவத்தை அழிப்பான் என்பது வெளிப்படை..)  திருமாலும் அறியாதவன் (இது சோதிப் பிழம்பாய் நின்ற சிவனின் அடியைத் திருமால் காண இயலாததைச் சுட்டும்.) எனினும், அவன் தன் அடியவர்களுக்கு அரியவன் அல்லன், எளியனாவன் என்றும், அவர் தமைப் பிரியாது காக்கும் பெரியோன் என்றும் நான் கூறுவேன்.
* அரியானை அந்தணர்தம் சிந்தையானை.. – அப்பர் தேவாரம்
** அரிதல்= அறுத்தல்; அழித்தல்; "அரிவாய் அடியோடும் என் அகந்தையையே”- கந்தர் அனுபூதி

திருமால்:

அரி என்ற பெயரைத் தாங்கியவன்.  அவனை அறியாதவனது  பவம்  (பிறப்பு-இறப்பு) என்னும் நோயை அழிக்கமாட்டான் (அறிந்தோரின் பவத்தை அழிப்பான் என்பது வெளிப்படை..)   அவன் (நர)சிங்க உருக்கொண்டவன் அல்லது வானோரிடைச் சிங்கம் போன்றவன்**.  அவனுடைய பெருமையைக் கேட்டு அறிந்த நான்*, அவன் தன் அடியவர்களுக்கு அரியவன் ஆகாத எளியன் என்றும், அவர் தமைப் பிரியாது காக்கும் பெரியோன் என்றும் கூறுவேன்.
* அரி = சிங்கம்
**அறி யான் – வினைத்தொகை

(இது மடக்கணி அமைந்த சிலேடை வெண்பா.)


அனந்த் 2-6-2016

No comments: