திருச்சிற்றம்பலம்
<> தேரூரும் செல்வன் <>
ஓருருவம் இல்லா ஒருவ!நீ
யாமுய்யப்
பாரொருகால் ஊன்றிமறு பாதத்தை விண்ணுயர்த்திப்
பேருருவத் துள்மெய்ப்
பொருளுணர்த்தும் வா(கு)என்னே!
காருருவ மாலவனும் கஞ்சமலர்
நான்முகனும்
சீருணர வொண்ணாத் திருவுருவை
நித்தமுமுன்
பேருரைப்போர் சிந்தைக்
குகையுள்ளே காட்டிடுவாய்
ஆருரைப்பார் இவ்வருளின்
அற்புதத்தை! மாமலைபோல்
தேருலவும் தில்லைவாழ்
செல்வ!எமை ஏன்றருளே.
( வாகு = அழகு, ஒழுங்கு,
ஒளி; ஏன்றல்= ஏற்றல்; வெண்டளை விரவிய எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா; படம்:
சிதம்பரம் நடராஜர் ஆனித் திருமஞ்சனத் தேரோட்டம்)
..அனந்த் 29-8-2016