திருச்சிற்றம்பலம்
<> கோலம் புரியும் ஜாலம் <>
கயிலைமலை மீதமர்ந்(து)இவ் அகிலமெல்லாம் ஆளும்நீல
.. கண்டனின்பெ ருமைசொல்லப் போமோ? – அன்பர்
துயரையெல்லாம் தீயிலிட்ட தூசியென ஆக்குமந்தத்
... தூயவனுக்(கு) ஆரும் இணை ஆமோ?
வெண்பனிமேல் செம்பவள மேனியதன் பாதியினில்
…மின்னொளிர்ம ரகதப்பெண் ணோடு - இளம்
தண்மதி குளிர்புனலும் செஞ்சடையில் தாங்கிநிற்கும்
… சங்கரனைப் பல்வகைப்பண் ணோடு
அழகுதவழ் பாடலிலே அடியவர்கள் ஆயிரமாய்
.. ஆடிப்பாடிப் போற்றுவதைக் காதால் – கேட்டால்
பழவினைகள் யாவும்கதிர் பட்டபனி போலழிந்து
.. பக்திவெள்ளம் நெஞ்சில்பெரு காதா?
தேவர்முனி மாலயன்முன் சேவடியைத் தூக்கியவன்
… தில்லையிலே ஆடும்வகை கண்டால் – ஐயன்
யாவிலும் நிறைந்துலகை ஆட்டுவிக்கும் மாயம்தன்னை
… அறியநெஞ்சில் ஆசைவரல் உண்டாம்
அருவமென்றும் உருவமென்றும் அருவுருவ மென்றுமவை
.. யாவையும் கடந்து நிற்கும் கோலம் - தன்னில்
உருகிஉள்ளொ டுங்கையிலே ஊன்மறையும் ’நான்’மறையும்
… உண்மைஇ(து) அவன்புரியும் ஜாலம்!
அனந்த் 26-11-2016