Friday, November 11, 2016

இடமும் வலமும்

திருச்சிற்றம்பலம்

<> இடமும் வலமும் <>



உடலம் ஏதும் இல்லாப்பே(ர்)
.. உணர்வாய் நிற்கும் ஒருபரமன் 

அடவும் ஜதியும் அபிநயமும்
.. அழகார் பதமும் ஒருசேர 

நடனம் ஒன்றை அம்பலத்தில்
.. நாளும் ஆடல் எங்ஙன்எனின்

இடமோர் பங்கில் இனிதுறையும்
.. எங்கள் அன்னை தயவாமே.

(அருவான பரசிவம் உருவம் கொள்ளச் சக்தியின் துணை தேவை என்றவாறு

                         *****













ஆட்டம் புரிய இயல்வதவள்
.. அளிக்கும் ஆற்றல் எனக்கண்டு

நாட்டம் அவள்பால் இருத்தித்தன்
.. நடத்தில் இடக்கால் தூக்கியபின்

ஊட்டம் பெற்று மதுரையிலே
.. ஒருவற் காக வலம்மேலாய்க்

காட்டி ஆடத் துணிந்தவனின்*
.. கால்கள் நமக்குக் கதியாமே.

(*இது ராஜசேகரன் என்னும் பாண்டிய மன்னன் ஆடலரசனுக்கு விடுத்த வேண்டுகோளைக்கு இணங்கிக் கால்மாற்றி ஆடியதைக் குறிப்பது)

                         *****


 
​​










இடமோ வலமோ எதுவெனினும்
.. என்றன் மனத்தில் அருவுருவாய்த்

திடமாய் நிலைத்த என்னரசே!
.. தேவை இதன்மேல் வேறிலையே

படமார் பாம்புன் திருமேனி
.. படர்ந்த வகையாய் நானுன்னை

விடவே மாட்டேன் எனைவிட்டு
.. வேற்றாய் நிற்றல் இயலாதே.

                         *****
..அனந்த்

 12-11-2016 (சனிப் பிரதோஷம்)

No comments: