திருச்சிற்றம்பலம்
<>என் மனம் <>
பொங்கும் கருணை நினைப்புடன்நீ
.. புவியில் மாந்தர் பிறக்கையிலே
அங்கம் பலவும் தந்தபினர்
.. அவற்றின் மேலாய் மனமென்னும்
தங்கா தெங்கும் அலைகின்ற
.. தன்மை சேரொன் றையும்தந்தாய்
இங்கே என்னுள் மனம்செய்யும்
.. ஈனச் செயலை நீயறியாய்!
நங்கை ஒருபால் உடையானை
.. நாடென் றால்என் நாய்மனம்தான்
எங்கோ எதையோ பின்தொடரும்
.. இங்கே வாவென் றதையழைத்துக்
கங்கா தரனை நினையென்றால்
.. கேளா(து) உலகில் நிலையாகத்
தங்காப் பொருள்கள் தமைத்தேடிச்
.. சலியா(து) அவற்றின் பின்னேகும்
ஒருகண மேனும் ஓயாமல்
.. உலகினில் காணும் பொருட்களின்மேல்
பெருகிடும் பற்றின் விளைவாகப்
.. பெற்றிடும் நினைவுக் குவியலிலே
உருளுமென் மனத்தால் உண்டாகும்
.. உபத்திர வத்தை நீயறியாய்
கருணைகூர்ந் தென்றன் நிலையுணர்ந்து
.. காத்திடின் உய்வேன் இலையழிவேன்.
அனந்த் 25-3-2017 (சனி மஹாப்ரதோஷச் சிறப்பு நன்னாள்.)