Tuesday, June 20, 2017

திறனைக் காட்டுவாய்

              திருச்சிற்றம்பலம்


         

மண்சுமந் தன்றோர் கிழவிக் குதவினை வாட்டு(ம்)மனப் 
புண்சுமந் தேங்குமிப்  பாவி அளித்திடும் புல்லியவிப்
பண்சுமந் தென்துயர் போக்க லரிதோ பரிந்திடமுக்
கண்சுமந் தாடும் கடவுள் உனதாள் கதியெனக்கே.    1

தொல்லை விளைக்கும் பிறவி அறுக்கும் தொழிலினில்நீ  
வல்லன் எனப்பிறர் வாழ்த்தக்கண் டேன்வளர் மாமதில்சேர்
தில்லைப் பதிவாழ் சிவனே! சிறியனென் தீயமனக்  
கல்லைக் கனியென மாற்றும் திறனையும் காட்டுவையே.    2

ஆலத்தை உண்டன் றமரரைக் காத்தோன் அலமருமென்
கோலத்தை மாற்றிடக் கூடான் எனத்தினம் கூறுமிந்த   
ஞாலத்தோர் காணஇந் நாயேற்(கு) அருளியுன் நாமஞ்சொல்வார்  
சீலத்தைக் காத்தல் சிவனுன் கடனெனச் செப்புவனே.    3
                                                                                   
மாலுக்கும் முன்னம் அயனுக்கும் உன்றன் மகிமையினைச்
சாலத் தெரிவித்த சேதியைக் கேட்டுளேன் சங்கர!என்
காலம் முடியுமுன் காணற் கரியஉன் கைலைவளர்க் 
கோலத்தைக் காட்டின் குவலயத் தோர்கரம் கொட்டுவரே.    4  

கள்ளம் நிறைமனத் தேனெனக் கண்டெனைக் கைவிடநீ
உள்ளம் கொளினெனக் குள்ள வழியிவ் வுலகிலில்லை
வெள்ளம் வழிசடை வேந்தநின் தாளை விடுவனல்லேன்
தள்ளிப் புறக்கணித் தாலுனைக் கேபழி சாருமன்றே.    5

தாங்கிட வொண்ணாத் துயரினில் வீழ்ந்துளச் சஞ்சல(ம்)மேல்
ஓங்கிடும் வேளை உறுகலக் கத்தில் ஒருநொடியும்
நீங்கிடா தென்னுள் நிறைந்துள உன்றன் நிலைமறந்து
தூங்குமென் போதை தெளிந்திட இன்றே துணைபுரியே    6

எண்ணிலாச் சீருடை ஈசனுன் முன்னம் இருக்கையிலே
கண்ணிலே நீரொடு கைதலை மேலாய்க் களிப்பதுவும்
அண்மைவிட் டேகின் அலறி அழுவதும் ஆகநிற்கும்
என்னிலை மாற எளியதோர் மார்க்கம் இருக்குதையே    7

ஐயமே தின்றி அனைத்துப் பொழுதும் அகத்தினில்நீ
மெய்யுணர் வாக விளங்கல் அறிந்திட வைப்பையெனில்
செய்வதொன் றின்றித் தினமுனை என்னுள் தெரிசனம்செய்
துய்வன்நான் பின்னர் தெரிவதெல் லாமுன் திருவுருவே.    8

உருவமாய்க் காட்டி உலகுளோர் தம்மை உனதுவசம்
வரும்படி செய்தவர் வந்தபின் உன்றன் வடிவிலுள்ளம்
உருகிடச் செய்தபின் உற்றதோர் வேளையில் உட்புகுந்தாங்(கு)
இருந்தவர் உண்மை இயல்பை உணர்த்தும் இறைவ(ன்)நீயே.   9

நீயே எனதுள் ளிருந்தெனை நின்னடி நீழலிலே
தாயின் பரிவுடன் தக்கவைத் துன்னைச் சாரவைத்தாய்
சாய்ந்திவ் வுடலம் தரைவிழும் போதும் தமியனிவன்
வாயுன் நாமம் மறவா துரைத்திட வைத்தருளே.   10  

..அனந்த் 21-6-2017

Tuesday, June 6, 2017

வழி காட்டும் பரமன்

                      திருச்சிற்றம்பலம் 














      <> வழி காட்டும் பரமன் <>

அகந்தையை அழிப்பாய் நீஎன்(று)
..அகிலம்வாழ் மாந்தர் காண
…அத்தியைப் புலியை மாய்த்தாங்(கு)
….அவற்றுரி போர்த்தி நின்றாய்

சகந்தனில் கால ஓட்டம்
..தனைஅவர்க்(கு) உணர்த்து(ம்) வண்ணம்
…சலித்திடும் நதியை உன்றன்
….சடையினில் வைத்தாய்; நாடி

உகந்தனை துறவிக் கோலம்
..உலகில்காண் பொருளில் பற்றை
…உதறுதல் வேண்டும் முக்தி
….உற்றிட என்று காட்ட

பகர்ந்திடப் போமோ இங்ஙன்
..பற்பல வகையாய் எம்மைப்
...பரிவுடன் வழிந டத்தும்
….பரம!நின் அருளின் மேன்மை!


..அனந்த் 6-6-2017