Friday, August 4, 2017

குடி கொண்டதுவே

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

                      திருச்சிற்றம்பலம்

                
             
      <> குடி கொண்டதுவே <>

பஞ்சினின் மென்தாள் பாவையொடு
.. பரமன் பனிவரை மீதினிலே

குஞ்சர முகத்தோன் குமரனுடன்
.. கூடி நடத்திடும் குடித்தனத்தை 

நெஞ்சினில் இருத்த நினைத்தேன்நான்
.. நிகழ்ந்த தேதென அறிவீரோ

தஞ்சமென் றெனது நெஞ்சமவன்
.. தாளின் கீழ்குடி கொண்டதுவே!
                
                        ****

தாடரும் தண்மை இதத்தினிலே
.. தாபம் தணிந்தவென் நெஞ்சினிலே

ஆடிடக் கண்டேன் அரன்குடும்பம்
..  அனைத்தும் அவனுடன் சேர்ந்(து)அந்த

நாடகம்  அதனின் அழகையென்னால்
.. நவிலல் எங்ஙனம்அவருடனே

கூடியென் நெஞ்சும் குதித்திடக்கை
.. கூடும் நாள்வரக் காத்திருப்பேன்.
(தாடரும் = தாள்தரும்)

                        ****

நாடொறும் இந்த வகையாக
.. நானென் நனவிலும் கனவிலுமாய்

ஆடலின் அரசேஉன்னைநினைத்(து)
.. அரற்றல் கண்டினி மேலுமிங்ஙன்

வாடிட லாகா வழியொன்றை
.. வகுத்தல் எளி(து)இனி வெளியிலுனைத்

தேடிட வேண்டா(து) என்னுள்ளே
.. திகழும் உன்னுரு தெரியவைப்பாய்.

                          ****
                                         ..அனந்த் 5-8-2017

No comments: