திருச்சிற்றம்பலம்
<>
விடுவேனோ? <>
விடுவேனோ உன்னை முதன்முறை கண்ட விநாடியிலே
தொடுவானம் கைகளிற் சிக்கிய தென்னும் சுகங்கொடுத்தாய்
படுபாவி என்னும் பெயரென்னை விட்டுப் பறந்ததினிச்
சுடுகாடும் தாண்டித் தொடர்ந்தென் பிடியினில் சிக்குவையே.
சிக்கி வலையுள் சிறகின் பயனின்றித் தொய்ந்துபயம்
மிக்கப் பெருகி விடுதலை காண விழையுமொரு
பட்சி யெனப்பவப் பந்தத்தில் மாட்டிப் பதறிநின்றேன்
தக்க தருணம் தனில்மீட்(டு) எனதுளில் தக்கினையே.
(தக்குதல் = வசப்படல், ஆட்சிக்குட்படல்)
இனைநீ எனவறி யாதென் மனத்தினிற்(கு) இட்டமுள
அனைத்தின் சுகமும் அனுபவிப் பேனெனும் ஆர்த்தியுடன்
முனைந்திவ் வுலகில் முயங்கிச் சலித்தவிம் மூடனுள்நின்
நினைப்பைப் புகட்டி நிறைத்து வழங்கினை நிம்மதியே.
(இனை – இன்ன தமையுடையாய்; ஆர்த்தி=விருப்பம்)
வினையாம் விதையென் மனமாம் நிலத்தில் விளைத்தபயன்
அனைத்தும் அழியும் அகத்துள் அரனுன் அருட்பதத்தை
நினைத்த நிமிடமென் றுன்னடி யார்சொலை நெஞ்சிருத்தித்
தினத்தைக் கழிப்பேன் தெரிசனம்
என்னுள்
தெரிவதற்கே.
தெரியும் எவையுளும் தேவனைக் காணு(ம்)மெய்ச்
சீர்படைத்தோர்
அரியர் அவர்தாள் பணிந்துன் அருளை அடைந்திடலே
சரியை கிரியை தவத்திலும் சாலச் சிறந்தெனப்
பெரியர் புகல்வரப் பேறெனக் கெட்டும் படியருளே.
..அனந்த் 15-12-2017 பிரதோஷ நன்னாள்
No comments:
Post a Comment