Wednesday, December 19, 2018

சிதம்பர நாதன்


திருச்சிற்றம்பலம் 

                     <> சிதம்பர நாதன் <>

           

எனது மனையு மெனது பொருளும் சதமென் றமையும் கருத்ததே
தினமு மனத்தி லலைந்து திரியும் கவலை புகுத்தி வருத்துதே
உனது பெருமை நனவும் கனவும் உணரும் நிலையைப் பெறுவனோ?
தனது நடன முறையில் அரிய பொருளைத் தருமென் இறைவனே! 

நானா வகையிலும் நாடோ றுலகினில் நானிங் குறுதுயர் அறியாயோ?
நானா இதனையென் பாலே வருகவென் றேனென் றுனதுளம் அறியாதோ?
நானா ரெனுமறி வேநான் பெறவருள் நீயேன் தரவுளம் குறியாயோ?
கோனா யனுதினங்  கோலங் கொளுமிறை யேஉன் னருளெனைக் குறுகாதோ?

காடும் பொதுமன்றும் காணும் படியாகக் காலை உயர்தூக்கிச் சொகுசாக
ஆடும் பரமேசா ஆரோ சொலஉன்றன் தாளைச் சதமாக அகங்கொண்டு
வீடும் உறவோரும் போதும் எனவிட்டு மீளும் வகைகாண வருவேனை
வாடும் பயிராக வாதை யதுநீங்க வாவென் றழையாமல் விடுவாயோ?

அனந்த் 20-12-2018 (பிரதோஷம்)

Monday, December 3, 2018

பேறு

            திருச்சிற்றம்பலம்


                 <> பேறு <>

செய்பல வேள்வியால் எய்திடும் சீரெலாம்
மெய்யுணர் வைத்தர லாகிடுமோ?
உய்வதற் கோர்வழி ஐயனின் முன்னிரு
கைகுவித் தேத்திடல் என்றுணர்வாய்

வாயினால் ”அத்தனும் தாயும்நீ உன்முனம்
நாயினும் தாழ்ந்தவன் நானெனினும்
சேய்பிழை நீபொறுப் பாயென வந்துளேன்
நீயலா தார்துணை?” என்றிறைஞ்சிச்

சிற்சபை நாதனின் பொற்பதந் தூக்கிடும்
அற்புதக் காட்சியில் மெய்ம்மறந்தால்
முற்றிலும் உன்வினை இற்றிடும் நற்றவர்
பெற்றிடும் பேறுனைச் சார்ந்(து)அதனால்

நானவன் தானெனும் ஞானமுள் ஓங்கிடும்
மோனமும் கைவரும் காண்பதெல்லாம்
கோனவன் பேருரு தானெனும் உண்மையாம்
தேனினைத் துய்த்தலும் வாய்த்திடுமே

மேலுல காளுவோர் பாலுமில் லாதவோர்
சீலமி தைத்தரும் நாதனவன்
மேலவன் கீர்த்தியே மேலவன் பேரருள்
மேலவற் கேபணி செய்பவரே!

... அனந்த் 4-12-2018, பிரதோஷம்

Monday, November 19, 2018

பிறவிப்பயன்

               திருச்சிற்றம்பலம் 




            <> பிறவிப்பயன் <>

உடுக்கள் வானக் கூரையிலே
.. உலவத் தொடங்கும் வேளையிலே 
….. ஓய்வு பெறுதற் காதவனும்    
…….. ஒருபால் ஒடுங்கி ஒளிகையிலே

உடுத்த புலித்தோல் மருங்கசைய         
உடுக்கை ஒன்றைக் கையேந்தி    
….. ஒள்ளிய பிறையைச் சடையிலணிந்(து) 
………. உலகோர் எவரும் காணும்வண்ணம்

அடுத்தி ருக்கும் அன்னையுடன்
.. ஆ!ஆ! இதுவே கயிலையென
…. அன்பர் கூவத் தில்லையிலே
……. ஐயன் நடனம் ஆடுகின்றான்

எடுத்த பிறவிப் பயனடைய
… இதைக்காண் பதுவே வழியலவோ?
….. என்னைப் போன்ற பாவியர்க்கும்
……… இதுபோல் அருளும் இறையுண்டோ?


... அனந்த் 20-11-2018 (பிரதோஷம்)

Sunday, November 4, 2018

அன்னையும் நீயும்

                           திருச்சிற்றம்பலம்

                       <> அன்னையும் நீயும் <> 
​              

தண்டும் செருப்பும் கல்லும் வில்லும் உன்றன் திருமேனி
… தீண்டும் வண்ணம் திக்கில் லாமல் முன்னம் திரிந்தஉனைக்
கண்டுள் இரங்கிக் கயிலைப் பதிவாழ் கௌரி கனிவுடனுன்
… கையைப் பிடித்துக் கணவ னாகக் கொண்டாள், இங்கேநான்
மண்டும் பிணிசேர் உடலும் அதனின் கொடிய மனமுமென்னை
… வாட்டும் வகையில் வாழும் போது கதிநீ எனஉன்னை
அண்டும் பொழுதில் அணைத்தென் துயரை ஆற்றா யெனில்அருகார்
.. அன்னை உன்னைச் சினப்பாள் எனநீ அறியா திருப்பாயோ?
(தண்டு – பாண்டியனின் பிரம்பு; செருப்பு- கண்ணப்பன் காலணி; கல் – சாக்கிய நாயனார் எறிந்தது; வில் – அருச்சுனனின் காண்டீபம்; அருகார் = அருகுஆர், அருகிலுள்ள)

அனந்த் 5-11-2018 சோமவாரப் பிரதோஷம்

Sunday, October 21, 2018

எந்நாளோ?





                      
 திருச்சிற்றம்பலம்




















                    <> எந்நாளோ? <>

பாடு பட்டுச் சேர்த்த பொருளுமென்றன்
.. பதவி மக்கள் சுற்றம் என்றிவற்றைத்
தேடிப் பெற்ற பேறென் றெண்ணிவந்தேன்
.. தீயும் பேயும் உலவும் காட்டினில்நீ
ஆடும் போதுன் முகத்தில் நிலவுகின்ற
.. அழியா நிறைவின் அழகைக் கண்டபின்னர்
ஈடிங்(கு) இல்லை அதற்கென் றுணர்ந்துகொண்டேன்
.. ஈசா! உன்பால் வருநாள் எந்நாளோ? 


மண்ணில் பிறந்து வளர்ந்து மூப்பெய்தி
.. மாளும் தொழிலே வழக்காய்க் கொண்(டு)உன்றன்
எண்ணம் நெஞ்சில் எழுதற் கிடமளியா
.. என்னை உன்றன் திருமுன் னேநிறுத்தி
வெண்ணீ றணிய வைத்துன் நாமத்தை
… வாயால் செப்ப வகைசெய் தருவியெனக்
கண்ணில் நீரை வழிய வைத்(து)அதிலென்
.. கருமம் கரைய வைப்ப தெந்நாளோ?

சற்றே வளைந்த இடத்தாள் மேல்நோக்கத்
.. தரையில் வலக்கால் அசுரன் மேல்பதியப்
பற்றும் இதனை என்றோர் கரம்தாளின்
.. பக்கம் சாய மற்றோர் கரமருள
ஒற்றைக் கையில் உடுக்கை எழுப்பிடும்நல்
.. ஒலியின் கதியோ(டு) உமைமேற் பார்வையிடச்
சுற்றும் அடியார் துதிக்க நீதந்தோம்
.. தோமென் றாடல் காண்ப தெந்நாளோ?


அனந்த் 22-10-2018 (ஸோமவாரச் சிறப்புப் பிரதோஷ நன்னாள்)

Friday, October 5, 2018

அருள் விளக்கம்

                 
                           திருச்சிற்றம்பலம்

 

                 <>   அருள் விளக்கம் <>

தூய ஞானமாம் வெளியினில் துலங்கும்
.. துரியசித் தானதோர் பிரமம்
….. தொழும்பருக் கிரங்கிச் சிற்சபை தன்னில்
……. தூக்கிய காலொடும் தோன்றி

மாயம் ஈதென மண்ணொடு விண்ணும்
……. மற்றபல் உயிரினம் யாவும்
……… வலதுகைத் துடியொலி வழிபடைத்(து) யாவும்
……….. வளர்ந்திட ஒருகரம் உதவ,

காயம் நீக்கவோர் கரத்திலே தீயும்
கரந்திட வலப்புறக் காலும்
…… கருணையின் மிகுதியால் தூக்கிய தாளே
……… கதியெனக் காட்டுமோர் கரமும்

ஆய உருக்கொடு அம்பலந் தன்னில்
ஆடிடும் அழகினை நித்தம்
…… ஆழ்ந்துதம் உளத்தினில் இருத்துநல் அடியர்
…….. அகத்திலே நிலைக்கு(ம்)மெய் யறிவே.

(ஐந்தொழில்: உடுக்கை - ஆக்கல்;  அபய கரம் - காத்தல்; இங்கு,  அது அடியார்க்கு அருளும் தூக்கிய இடக் காலைச்  சுட்டுவதாகவும் குறிக்கப்பட்டது ; தீ - அழித்தல்;  வலக்கால் - கரத்தல் (மறைத்தல்); இடதுகால் - அருளல்.)  

அனந்த் 
6-10-2018 (சனி மஹாப் பிரதோஷம்) 

Friday, September 21, 2018

சரியாமோ?

  
                 திருச்சிற்றம்பலம் 

         
            
                 <> சரியாமோ? <>
தங்கத் தலமும்தவறா துணவும் தந்துஉம் தேவை எல்லாமும்
… தானே பார்த்துத் தரவோர் மங்கை உம்மோ டொட்டி இருக்கையிலே

அங்கும் இங்கும் ஆனொன் றேறி அலைந்(து)ஊர் ஊராய் நாடோறும்
… அன்னம் தேடி இரந்தே உண்ண ஆசை நீர்தாம் கொண்டீரேல்

இங்(கு)உம் அருளால் இல்லம் நடத்தி இறைஉம் நினைவில் அகலாமல்
… இருக்கும் அடியார்க் கீவ தற்(கு)உம் பாலே துண்டென் றறியேன்யான்

சங்கம் முழங்கத் தாரை ஒலிக்கத் தாத்தை என்றே நடமாடும்
… சத்தத் தினிலென் சந்தே கத்தை மறக்கச் செய்தல் சரியாமோ?

(*பார்வதியம்மை தான் வசித்துவந்த இமயமலையில் தன் கணவரும் வசிக்குமாறு ஏற்பாடு செய்ததாகத் தற்குறிப்பேற்றம். 14-சீர் ஆசிரிய விருத்தம்; அரையடி: தேமா+ 5 மா + காய்.)
அனந்த் 22-9-2018 சனி மஹாப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


Thursday, September 6, 2018

விளையாடல் ஆமோ?

              திருச்சிற்றம்பலம்
      <> விளையாடல் ஆமோ? <>    


ஈதென்ன விளையாட்டுஈசனுன்னைப் பூசைசெய்ய
.. இயலாமல் ஆக்குவதில் என்னசுகம் கண்டனையோ?
போதொடு*நான் நீர்சுமந்து புலர்காலை வேளையிலே
.. பூரணன்உன் மேனியிலே பொழிவனென நினைக்கையிலே
மாதொருத்தி நீரைஉன்மேல் மாரியெனப் பெயக்காண்பேன்
.. மணங்கமழும் பன்னீரும் மற்றுமபி டேகத்திற்(கு)
ஏதுவெனச் சேகரித்த இளநீரும் சந்தனமும்
... ஏற்பதற்குன் நெஞ்சமினி இடம்தருமோ கூறுவையே?

காவொன்றில் நான்புகுந்து கனகசபை ஐயனுன்றன்
… காலடியில் இடுவதற்கென் கைகொண்டு நன்கலர்ந்த
பூவெடுத்துப் பூசைசெய்யப் போகையிலப் *போதிலுன்றன்
.. பூமுகத்தைக் கண்டென்றன் பொறியியங்க மறுக்கவைப்பாய்**
தேவேநான் உன்றனுக்குச் சேவைசெய்ய வழியொன்றைத்
… தேடுவதில் நாளெல்லாம் செலவழிப்பேன் இறுதியிலென்
நாவெடுத்துன் நாமத்தை நவிலவுமென் நாக்குழறும்
… நானிங்ஙன் தவிப்பதுமுன் நடிப்பிலொரு கூறாமோ?
*போது = பொழுது; அரும்பு மலர்; ** திரு. தாயுமானவ அடிகளாரின் “பண்ணேன் உனக்கான பூசை..” எனத் தொடங்கும் பாடலை நினைவு கூர்க.)

..அனந்த் 7-9-2018  (பிரதோஷ நன்னாள்)

Wednesday, August 22, 2018

மன்றில் காணீர்!



திருச்சிற்றம்பலம்


































<>  மன்றில் காணீர்!  <>
 
தூய்மையை விளக்கும் தேகம்
.. துறவினை ஏற்கும் தியாகம்
வாய்மையின் முடிபாய் மோனம்
.. மறைபுகல் ஞான கானம்
தாயினும் அளிசேர் உள்ளம்
.. தலையிலே உலவும் வெள்ளம்
போயிவை காணீர் மன்றில்
.. புரிநடத் தோன்பால் இன்றே.

ஒருகையில் உலகின் தோற்றம்
.. ஒருகையால் அனைத்தின் ஏற்றம்
ஒருகையோ உயிரின் கூற்றம்
ஒருகையங்(கு) அவற்றின் மாற்றம்*
ஒருகையால் அருளின் ஊற்றம்
.. உவகையோ(டு) இவற்றைச் சாற்றும்
திருவுரு காணீர் தில்லைத்
.. திருத்தல மன்றில் இன்றே.
(*திரோதானம்)

காலமோ(டு) இடம்க டந்த
.. காரண வத்து ஒன்றின்
சீலமீ தென்று காட்டும்
.. சித்வெளி தனையும் இந்த
ஞாலமீ துருவங் கொள்ள
.. நாட்டிய விதையாம் லிங்கக்
கோலமே யாதும் ஆகும்
.. கூத்தையும் மன்றில் காணீர்! **
(மேற்குறித்த சித்வெளி, லிங்கம், கூத்தாடும் வடிவம் ஆகியவை, முறையே சிவதத்துவத்தின் காரண, சூக்கும , தூல வடிவங்களைச் சுட்டும்.)

அனந்த் 22/23-8-2018

(இணைப்புப் படம், நன்றியுடன்: ”நடராசப் பெருமான்”- திருவாவடுதுறை ஆதீனம் பதிப்பு, 2001)