Monday, February 26, 2018

ஒன்ற வைப்பாய்


<> ஒன்ற வைப்பாய் <>

குப்பை எனச்சீழ் நிணம்நரம்பு
.. குவிந்த உடலும் என்றென்றும்
தப்பே செய்யும் மனத்தினையும்
.. தந்தாய் இவற்றைத் துணைகூட்டி
எப்போ துன்னை ஏத்துவதற்(கு)
.. இயலும் எனநான் அறியேனே
அப்பாஆல வாயழகா
.. அருளாய் கதியொன்(று) அடியேற்கே

உலகில் என்னை உலவவிட்டாங்(கு)
..ஒவ்வாச் செயல்கள் புரியவைப்பாய்
அலகில் விளையாட்(டுஇறைவனுன்னை
.. அறவே மறந்து திரிகையிலுன்
நிலவைக் காட்டி நீர்காட்டி
.. நின்பால் ஈர்த்தென் நிலையைநினைத்(து)
அழவும் வைப்பாய் அநீதியிதை
..ஆர்பால் கூறி அழுவேனே?

பாடு பவன்நான் பாட்டுடையோன்
.. பரமன் நீயென்று இருவகையாய்
நாடும் இந்த நாடகத்தை
.. நான்வி டுத்து மாற்றமின்றித்
தேடும் பொருளும் தேட்டமுமாய்த்
.. திகழும் பரத்தில் ஒன்றவைப்பாய்
ஆடும் நடத்தின் வழியாக
.. அனைத்தும் உணர்த்தும் என்னரசே!
























அனந்த் 27-2-2018

Monday, February 12, 2018

சிதம்பர தரிசனம்



                                                           திருச்சிற்றம்பலம்



<> சிதம்பர தரிசனம் <>

அன்னே!உன் முன்னரிவ் வடியனும் நின்றிடும்
… அளப்பிலா அருள்பு ரிந்தாய்
என்னேஉன் பேரெழில்! என்னேஉன் ஆடல்என்
… என்பினை உருக வைக்கும்
மின்னேபோல் தாக்கியென் மெய்யெலாம் விதிர்த்திட
… வேறொரு நினைப்பும் அற்றேன்
உன்னேன்என் வாழ்வினில் உன்பதம் அன்றியான்
.. உய்ந்தனன் தில்லை மன்னே!

<> அருள்பொழிவோன் அடிபணிவோம் <>

நான்என்* செயும்அரன் நாமம்என் நாவால் நவின்றதுமென்
ஊனும் உருகி உணர்வும் உருகியென் உள்ளிருக்கும்
தானும் உருகித் தனிநிலை மிஞ்சிமெய்த் தத்துவனாம்
கோனில் கலந்தவன் கூத்தினில் சேர்ந்து குதிக்கையிலே    (1)

கையில் துடியும் கனலும் அருள்பெறக் காலடியே        
உய்யும் வழியென் றுணர்த்தும் சமிஞ்ஞைகொண்(டு) உள்ளுருகச்
செய்யும்
சிதம்பரச் செல்வனின் சீரடி சிந்தைவைத்தார்
வையம் வழங்கும் சுகத்தைப் பதரென வீசுவரே.                      (2)

வீசிடுந் தென்றலும் வீணையின் நாதமும் விண்மதியின்       
தேசுடை வேனிலும் சேருதல் போன்றது செம்மலராம்      
ஈசனின் சேவடி நீழலென்(று) அப்பர் இயம்பியதைப்          
பேசி உருகிடும் பேறதன் மிக்கவொர் பேறுளதோ?                  (3)

தோற்றத் தழகினில் தோய்ந்து கிடக்கையில் சொல்லவொணா
மாற்றம் எழும்நம் மனத்தின் நினைவுகள் மாய்ந்துநம்மின்
வேற்றல் லானெனும் விந்தை உணர்வு விளையுமுள்ளே
ஊற்றுப் பெருக்காய் உவகைப் புனல்பொங்கி ஓடிடுமே.       (4)

மேல்கீழ் எனவும் வெளிஉள் எனவுவேற்றுமைகள்
ஆலி கடலுள் அமிழ்ந்த வகையில் அழிந்துமுனம்
ஆலின் அடியினில் ஐயன் உரையின்றி அன்றமர்ந்த
கோலம் குறிக்கும் குறிப்பின் பொருள்உள் குதிர்ந்திடுமே      (5)

உள்ளதாய் எல்லா உணர்வுளும் நிற்கும் ஒருபொருளை
உள்ளுளே காண உதவும் வகையினில் ஓருருவாய்த்
தெள்ளெனக் கண்முன் தெரிய நடமிடும் சிதம்பரத்தான்
உள்ளபோ திங்கே உரைப்பதற் கில்லை ஒருகுறையே.             (6)

ஒருங்கே இணைந்த உமையுடன் எல்லா உலகினையும்
தருங்கோன் புரந்தும் துடைத்தும் கரந்தும் தனதடியை
நெருங்கு பவர்கருள் நின்மலன் நெஞ்சில் நிலைத்துவிடில்
வருங்கொல் பவமெனும் மாய வலைவிழும் வாதனையே?     (7)  

தனையே நினைந்து தலந்தொறுஞ் சென்றுநற் றண்டமிழ்ப்பாப்
புனைவார் உளத்தினில் பூவாய் மலர்ந்திடும் புண்ணியன்நம்
வினையாம் விலங்கைத் தகர்ப்பான் எனவே விரைந்துலகீர்
முனைவீர் அருளாம் முகில்பொழி மாரியில் மூழ்கிடவே         (8)

வேதப் பொருளாய் விளங்கி இதய வெளியினிலே
நாதன் நடமிடும் காட்சியை நீவிர் நயனம்வழிக்
காதல் ததும்பக் கனக சபைதனில் கண்டபின்னர்
ஏதொர் குறையும் இலராய் இருப்பீர் இதுதிண்ணமே.**           (9)

மேலும் உரைத்தலும் வேண்டுவி ரோஇந்த வீணுடலம்
கோலும் குனிப்பும்# கொடுநாட் கடத்தியக் கூற்றுவனின்
பாலும் விரையும் பரிபவம்## சாருமுன் பத்தருக்(கு)எக்
காலும் அருள்செய் கனக சபையோன் கழல்பணிவீர்.             (10)

*இங்கு, ’நான்’ என்பது காலம், இடத்திற்கு அப்பாலான தனது உண்மைச் சொருபத்தை அறியாமல், ஊனால் ஆன உடலையும் எண்ணக்கோவைகளால் ஆன மனத்தையும் தானாகக் கருதும் அகந்தை நிலையைக் குறித்தது.
** ஒற்று நீக்கி அலகிடுக; ஆலி=ஆலங்கட்டிகுதிர்தல் = குடியமர்தல், படிதல், ஒழுங்காதல் #குனிப்பு=வளைப்பு;; கொடு=கொண்டு என்பதன் குறுக்கம்;  ##பரிபவம் = அவமானம்,  இகழ்ச்சி .

கட்டளைக் கலித்துறை அந்தாதிப் பதிகம்.

அனந்த் 13-2-2018  (மகாசிவராத்திரித் திருநாளோடு கூடிய பிரதோஷச் சிறப்பு நன்னாள்)