இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> எனக்கும் அருளினன் <>
அடிமுடி யில்லா ஆதிப் பரமே
…. அடியேன் உன்றன் மலர்நிகர்த்த
அடிமுடி மேல்வைத் ததனால் உன்மெய்
… அடியார் கூட்டில் இசைந்துன்றன்
அடியிணை பரவும் வாய்ப்பைத் தந்தாய்
…. அதனின் மேலுண் டோஉலகில்
அடிபல பெறினும் அஞ்சேன் யான்,உன்
.. அருளே எனக்குத் துணையாமே.
படியா மூடன் பயனொன் றில்லாப்
.. பதடி எனயா வரும்கூறும்
படியான் வாழ்ந்தென் நாளெல் லாம்யான்
.. பாழ்செய் தேன்கோ யில்வாயிற்
படியும் மிதியாப் பாவி யேனைப்
… பரம! ஏற்ற வகையாலிப்
படியும் விந்தை புரிவா யென்றிப்
…பாரோர் வியக்கச் செய்தனையே.
அப்பணி ஈசா அம்பிகை நேசா
.. அனுதினம் உன்னைத் தொழலென்னும்
அப்பணி யன்றி அடியேன் வேறொன்(று)
… அறியேன் பெரியோர் துதிகள்கேட்(டு)
அப்படி நானும் பாடித் துதிக்க
.. ஆவ லுடன்நீ ஆடரங்கின்
அப்படி முன்நின்(று) அழுதென் உயிருன்
.. அடியில் சேர அருள்வாயே.
(அப்பணி – நீரை அணிந்த; அந்தத் தொண்டு; அப்படி முன் = அந்தத் திருக்களிற்றுப் படியின் முன்)
அனந்த் 25-6-2018