இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> அறியாமையும் அருளே <>
பொறிவாய் புகுந்தவொர் புள்ளிமான் ஒத்துப் புலன்களிட்ட
நெறிவாய் நடந்துன் நினைவிலா நெஞ்சுடன் நித்தமும்பொய்
தெறிவாய் படைத்திட்ட தீயரைப் பற்றிய செய்திகளை
அறியா மையுமுன் அருளென் றடியேன் அறிகுவனே
அறிவம் அனைத்துமென் றார்சொலி னும்மஃ தகந்தையினோர்
குறியென் றறிந்தவர் கூட்டினில் சேராக் குணத்துடன்நன்
நெறியில் செலுமொர் நிலையெனக் கீவாய் நெளிசடையில்
தெறிநீர் நதியணி தேவ! சரணுன சேவடியே.
அடியே கதியென் றனுதினம் உன்பால் அணுகிநிற்கும்
அடியார் துணையை அருளியிவ் வற்பன் அனுபவிக்கும்
செடியார் வினைப்பயன் தீரும் படியருள் செய்திடுவாய்
துடியார் கரத்தோய்! தொழுவார்க் கிரங்கும் தூயவனே!
( (உன = உனது; செடி ஆர்= துன்பம் நிறைந்த)
.. அனந்த் 11-6-2018
(படம்: திருமயிலைக் கபாலீச்வரர் ஆலயத்தில் சிவகாமி ஸமேத ஸ்ரீநடராஜ மூர்த்தி)
No comments:
Post a Comment