Wednesday, January 2, 2019

கூத்தில் கலப்பு


                    திருச்சிற்றம்பலம் 

                               
                
                   <> கூத்தில் கலப்பு <>

ஓய்ச்சலே இன்றி ஒருபொருள் இல்லா உளறலுற்ற
பேச்சையே என்றும் பிதற்றித் திரிவனைப் பேரருள்கண்
வீச்சிலே கொட்டும் விடையமர் பெம்மான் விளித்தனன்காண்:
கூச்சலை விட்டுக் குழந்தாய் கலந்திடென் கூத்தினுள்ளே!

கேடான பாதையில் செல்லினும் செல்வம் கிடைத்திடின்தாம்
வாடார் எனப்பலர் மண்ணிதில் ஓடுமவ் வாழ்வைவிட்டு
வீடான ஒன்றை விரும்பும் அகம்விட்டு வேறெங்கிலும்
ஓடாத ஓட்டமும் உண்டடி காணிவ் வுலகினிலே.

கள்ளப் புலனிட்ட கட்டுக்குள் சிக்கிக் கறுத்தமாயைப் 
பள்ளத்துள் வீழ்ந்துகண் பார்வை இழந்து பரிதவியா(து)
உள்ளத்துள் என்றும் உறைவோன் பதம்நினைந் துவகையென்னும்
வெள்ளத்துள் என்றும் விழுந்திட மேலோர் விரும்புவரே    

..அனந்த் 3-1-2019 பிரதோஷ நன்னாள்

No comments: