Sunday, March 17, 2019

புகல் அவனே

                                 திருச்சிற்றம்பலம்



                                 <> புகல் அவனே <>


                 


உடனுமை அமருவ(துஇடத்தினிலே உலவுவ தடியர்தம் மிடத்தினிலே
அடல்வெளிப் படுமொரு போர்நடுவே* அருள்வெளிப் படுந்துதிப் போர்நடுவே
மிடறினில் விரிகடல் உறைவிடமே விழைவது பனிமலி உறைவிடமே 
உடையென அணிவதவ் வம்பரமே உருவரு வடிவுசி தம்பரமே.
(*திரிபுரமெரித்தது)

காமனை எரிப்பது மவன்கண்ணே கருணை உறைவது மவன்கண்ணே
நாமமோர் ஆயிரம் உடையவனே நாடுவன் புலியதள் உடையவனே
மாமது ரைக்கதி பதியவனே மறைநிதம் புகழ்பசு பதியவனே
சேம மளிப்ப(து) அவன்பதமே சீரடி யார்க்குறும் சிவபதமே.
(பதம் = பாதம், பதவி)  

அருமறை புகன்றிடும் பரனவனே யாவிலும் நிறைதிகம் பரனவனே
இருவர்முன் அறியவொ ணாதவனே இருத்திடு மொருகண்ணி லாதவனே
அருளொளி திகழ்தின கரனவனே அடியவர் புகழுசங் கரனவனே
குருவடி வுடனறம் புகலரனே கும்பிடு பவர்க்கொரு புகலரனே.

..அனந்த் 18-3-2019 சோ(மவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்)


Saturday, March 2, 2019

திருக்கோலத்துள் ஒடுக்கம்


                                         திருச்சிற்றம்பலம் 

                               

                    <> திருக்கோலத்துள் ஒடுக்கம் <>

கயிலைமலை மீதமர்ந்(து)இவ் அகிலமெல்லாம் ஆளும்நீல 
.. கண்டனின்  பெருமை சொல்லப் போமோ? – அன்பர்
துயரமெலாம் தீயிலிட்ட தூசியென ஆக்குமந்தத்
... தூயனுக்கு யாரும் இணை ஆமோ?

வெண்பனிமேல் செம்பவள மேனியதன் பாதியினில்
மின்னொளிர் மரகதப்பெண் ணோடு - வீற்றுத்
தண்மதி குளிர்புனலும் செஞ்சடையில் தாங்குகின்ற
சங்கரனைப் பல்வகைப்பண் ணோடு

அழகுதவழ் பாடலிலே அடியவர்கள் ஆயிரமாய்
.. அனுதினமும்  சீருரைத்தல் காதால் கேட்டால் 
பழவினைகள் யாவும்கதிர் பட்டபனி போலழிந்து
.. பக்திவெள்ளம் நெஞ்சில்பெரு காதா? 

தேவர்முனி மாலயன்முன் சேவடியைத் தூக்கியவன்
தில்லையிலே ஆடும்வகை பார்த்தால்அண்டம்
யாவையும் அவன்வசமாய் ஆட்டுவிக்கும் மாயம்தன்னை
அறிவதற்கு ஆசைவரும் யார்க்கும்

உருவுடன் அருவுருவின் உண்மையைப் பரவெளியில்
உலகினர்க்(கு) உணர்த்தி நிற்கும் கோலம்தன்னில்
உருகிநிற்கும் வேளையிலே ஊர்மறையும் பேர்மறையும்
உணருவோம் அவன்புரியும் ஜாலம்!

(காவடிச்சிந்து மெட்டில் அமைந்தது; ஒலிப்பதிவைக் கேட்க:  https://drive.google.com/file/d/1LI9jCitmbrZTs8jBz0zSACNa-nrFaYj5/view?usp=sharing
)

அனந்த் 3-3-2019 பிரதோஷ நன்னாள்