திருச்சிற்றம்பலம்
<> திருக்கோலத்துள் ஒடுக்கம் <>
கயிலைமலை மீதமர்ந்(து)இவ் அகிலமெல்லாம் ஆளும்நீல
.. கண்டனின் பெருமை சொல்லப் போமோ? – அன்பர்
துயரமெலாம் தீயிலிட்ட தூசியென ஆக்குமந்தத்
... தூயனுக்கு யாரும் இணை ஆமோ?
வெண்பனிமேல் செம்பவள மேனியதன் பாதியினில்
…மின்னொளிர் மரகதப்பெண் ணோடு - வீற்றுத்
தண்மதி குளிர்புனலும் செஞ்சடையில் தாங்குகின்ற
… சங்கரனைப் பல்வகைப்பண் ணோடு
அழகுதவழ் பாடலிலே அடியவர்கள் ஆயிரமாய்
.. அனுதினமும் சீருரைத்தல் காதால் – கேட்டால்
பழவினைகள் யாவும்கதிர் பட்டபனி போலழிந்து
.. பக்திவெள்ளம் நெஞ்சில்பெரு காதா?
தேவர்முனி மாலயன்முன் சேவடியைத் தூக்கியவன்
… தில்லையிலே ஆடும்வகை பார்த்தால் – அண்டம்
யாவையும் அவன்வசமாய் ஆட்டுவிக்கும் மாயம்தன்னை
… அறிவதற்கு ஆசைவரும் யார்க்கும்
உருவுடன் அருவுருவின் உண்மையைப் பரவெளியில்
… உலகினர்க்(கு) உணர்த்தி நிற்கும் கோலம் – தன்னில்
உருகிநிற்கும் வேளையிலே ஊர்மறையும் பேர்மறையும்
…உணருவோம் அவன்புரியும் ஜாலம்!
(காவடிச்சிந்து மெட்டில் அமைந்தது; ஒலிப்பதிவைக் கேட்க: https://drive.google.com/file/d/1LI9jCitmbrZTs8jBz0zSACNa-nrFaYj5/view?usp=sharing
… அனந்த் 3-3-2019 பிரதோஷ நன்னாள்
No comments:
Post a Comment