Sunday, February 17, 2019

என் பரிபவம்

                                        திருச்சிற்றம்பலம்


              


                                       <> என் பரிபவம் <>


நாட்டார் வியந்திட நாற்கவி புனையலாம் நானிலம் பவனிவரலாம்
… நற்றுணை சேர்க்கலாம் நவநவ சித்திகள் நன்குகை வரல்நிகழலாம்

சேட்டை புரிந்திடும் சிந்தையைத் தேக்கியுன் திருவடி யிணைநிலைத்திடச்
.. செய்வதின் மேலொரு திறனெதும் இல்லையே தில்லையில் கனகசபையில்

ஆட்டை நிறுத்திடா வண்ணமாய் ஐந்தொழில் அழகுறப் புரியுமையனே
… அன்னையும் நீயுமாய் அடங்கிடா தலையுமென் மனத்தினால் அடியனேன்படும்

பாட்டைக் கண்டிவன் நமதுசேய் எனும்அருட் பார்வையைப் பதித்திடுவையேல்
… பட்டென அந்தவோர் கணத்திலென் பரிபவம் யாவுமே பறந்தொழியுமே.

(ஆட்டை = ஆட்டத்தை; பரிபவம் = இழிவு; கவலை, அவமானம்;
பன்னிருசீர் ஆசிரிய விருத்தம். தே/புளிமா விளம் விளம் விளம் விளம் கருவிளங்கனி)

அனந்த் 17-2-2019 (பிரதோஷம்)

No comments: