திருச்சிற்றம்பலம்
<> என்னை மயக்கியோன் <>
படியா திருந்தேன் பரமநின்றன்
.. பாங்கைப் பலவாய்ப் பரிந்துரைத்த
அடியார் சொலையும் அலட்சியஞ்செய்(து)
.. அடியேன் இருந்த அவ்வேளை
துடியார் கரமும் அழற்கரமும்
… தூக்கிய பதமும் காணவைத்துன்
வடிவார் நடத்தில் மயக்கிஎனை
.. வரித்த கருணைக் கிலையிணையே.
புரிதற் கரிய பூரணமே
… புன்மை யேனுன் புகழுரைக்க
உரிய நலங்கள் ஒன்றேனும்
… உடையேன் அல்லன் எனவறிந்தும்
பரிவோ டுன்றன் பதமலரைப்
… பார்க்கும் வாய்ப்பை நல்கினை நீ
நரியைப் பரியாய் மாற்றியபின்
.. நடந்த கதைபோல் இதுவாமோ*?
(*மாணிக்க வாசகருக்காக இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலில், குதிரைகளாக மாற்றப்பட்ட நரிகள் மீண்டும் தம் சுயஉருவைக் கொண்டதைச் சுட்டியது .)
இனிநமைப் பிரியா னெனஎண்ணி
.. இறுமாப் பில்நான் திளைக்குங்கால்
தனிமையில் என்னைத் தவிக்கவிட்டுச்
.. சாலத் தொலைவில் மறைந்திடுவாய்
எனைநீ இதுபோல் அலைக்கழித்தல்
.. ஏனோ எனநான் அழுகையிலே
பனிமலை உறைவோய்! மனமிளகிப்
.. பரிந்தென் னுள்ளே புகுவாயே.
என்னுள் நீநின் றாயேல்நான்
.. உன்னுள் உளனாய் ஆவேனென்(று)
உன்னும் போதில் உவகையெனும்
.. ஓதத் தில்நான் மிதந்திடுவேன்
என்கண் மணியே! என்னுயிரே!
.. எல்லை யில்லாப் பெருவெளியாம்
பொன்னம் பலத்துப் பொன்னே!என்
.. பொல்லா இறையே! பூரணமே!.
அனந்த் 2-2-2019 (சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.)
No comments:
Post a Comment