திருச்சிற்றம்பலம்
<> மயக்கறுப்பாய் <>
வயதைக் கொடுத்தாய் வலியைக் கொடுத்தாய்
.. வாடும் உடலின் வலுவைக் குறைத்தாய்
பயத்தில் வாழும் பரிசைக் கொடுத்தாய்
.. பாரோர் இகழும் நிலையைக் கொடுத்தாய்
கயிற்றில் பாம்பைக் காணும் வரைஇக்
.. கட்டம் மெய்போல் காணும் உன்றன்
வயத்தே என்னை வரவ ழைத்திம்
.. மயக்கம் தீரும் மருந்(து)ஈ யாயோ?
(குறிப்பு: இருளில், கயிறு ஒன்றைப் பாம்பெனக் கருதி அஞ்சுவதைப் போல், பொய்த் தோற்றமான இவ்வுலகத்தில் நாம் அனுபவிக்கும் இடர்களை உண்மையெனவும் அவை இறைவனால் கருணையின்றி நமக்குத் தரப்பட்டவை எனவும் எண்ணுதல்; கட்டம் – கஷ்டம்.)
* * * * *
கண்மங்கிப் போனாலும் கனகசபை நாத!மனக்
கண்மங்கா தென்னைநீ காப்பாயேல் - ஒண்கதிரும்
தண்மதிதீ முக்கண்ணாய்த் தாங்கிடுவோய்! உன்நடத்தை
உண்மகிழக் காண்பேன் உவந்து.
(நடத்தை = நடனத்தை)
அனந்த் 16-4-2019 (வட அமெரிக்காவில் இன்று பிரதோஷம்)