Sunday, July 28, 2019

ஈசனின் ஆசை

                              <> ஈசனின் ஆசை <>




    




<> ஈசனின் ஆசை <>

மாலோ டுமையுன் தேகத்தின்
.. மற்றோர் பாதியில் ஏற்றதனால்

நீல நிறத்தில் ஆசைகொண்டு
.. நேரம் வரும்வரை காத்திருந்து

வேலை தனிலோர் நீலவண்ண
..விடத்தைக் கண்டதும் விழுங்கஅது

மேலே பரவா துன்மிடற்றில்

.. விளங்கச் செய்தனள் மனையவளே

(வேலை= கடல். மிட று=கழுத்து. அறுசீர் விருத்தம்: தேமா மா காய் மா விளம் காய்)

பின் குறிப்பு: 1. தற்குறிப்பேற்ற அணியாக இங்குக் கூறப்பட்ட கருத்தை இக்காலத்து ஓவியர்கள் மெய்யெனக் கொண்டு சிவபெருமானை மேனி முழுதும் நீலவண்ணனாக்கி மகிழ்விக்கின்றனர் எனத்தோன்றுகிறது
இரு காட்டுகள்:





2. சிவபெருமான் ஸ்படிக (பளிங்கு) நிறத்தினர் என்று அவரைப் பற்றிய தியான ஸ்லோகங்களிலும் பிற ஸ்துதிகளிலும் கூறக் காண்கிறோம் (சுத்த ஸ்படிக சங்காஸம், ஸ்படிகாபம்...).  பளிங்கு, தன்னருகில் உள்ள பொருளின் நிறத்தைப் பிரதிபலித்துத் தானும் அந்நிறமுடையதாகத் தோற்றம் கொள்ளும்.  அவ்விதத்தில், அவர் திருமால், அன்னை ஆகியோரின் நிறத்தை ஏற்றுத் தமது உடலை முழு நீலமாகக் காண்பிப்பார் என்று நாம் கொள்ள வாய்ப்புள்ளது.!   

அனந்த் 29-7-2019 சோமவாரப் பிரதோஷம்

Saturday, July 13, 2019

வழி காட்டுவாய்


          
         திருச்சிற்றம்பலம் 


                 <> வழி காட்டுவாய் <>

நானெனதென் றென்னுள்ளே நாடோறும் அரவொன்று
.. நச்சுமிழ்ந்த வாறிருக்க நானுமதன் மயக்கில்மனம்

போனபடி வாழ்ந்துபிறர் புகல்சொல்லைக் கேளாமல்
.. பொழுதையெலாம் வீணாக்கிப் புன்மையனாய் வாழ்ந்துவிட்டேன்

ஊனுடலம் எரிந்தழியும் ஓரிடத்தில் உலகுதரு
.. ஒருசுகமும் சதமிலையென்(று) உணர்த்து(ம்)வகை நடம்புரியும் 

கோனுனது திருப்பெயரைக் கூறிடவும் தகுதியிலாக்
.. கொடியனெனக் கொருவழியைக் குறிக்கிலையேல் அழிகுவனே.

(எண்சீர் ஆசிரிய விருத்தம், முதற்சீர் கூவிளங்காய் + 7 காய்ச்சீர்)  

அனந்த் 13-7-2019 பிரதோஷம்