அம்பிகையை அணைக்குங்கை ஆறிருகைப் பாலனொடு
தும்பிக்கை யானையும்மேல் தூக்குங்கை சூலத்தால்
வெம்பகையைச் சாடுங்கை மெஞ்ஞானந் தனைமுன்னம்
நம்பிக்கை தொழுதோர்க்குச் சைகையினால் நாட்டுங்கை
தம்பிக்கை பெறஓடு தாங்குங்கை இருவிழிநீர்
பம்பிக்கை தொழுமடியார் பழவினையைப் பாற்றுவைஎன்(று)
எம்பிக்கை ஏந்தினருள் கை.
(பிக்கை = பிக்ஷை; பம்புதல்=பெருகுதல்; பாற்றுவை= அழிப்பாய்; எம்புதல் = எழும்புதல்; ஏந்துதல்=கைந்நீட்டல்)
ஆடுங்கால் அடியரெல்லாம் சேவித்துச் செந்தமிழில்
பாடுங்கால் ஊணிரக்கப் பகலிரவாய் ஊரெல்லாம்
ஓடுங்கால் ஒருகால்மால் உன்னடியை மண்ணகழ்ந்து
தேடுங்கால் எனப்பலவாய்த் திகழுங்கால் தனைஎளியேன்
வாடுங்கால் மனத்திருத்தி மாதேவா உன்னருளை
நாடுங்கால் காப்பாய் நயந்து.
.. அனந்த் 12-8-2019 சோமவாரப் பிரதோஷம்
No comments:
Post a Comment