திருச்சிற்றம்பலம்
<> அதுவே போதும் <>
உன்னருள் கிட்டநான் ஆற்றிலேன் உனக்கென ஒருவகைப் பணிக ளேனும்
… உரைப்பதற் கேற்றதோர் உத்தமப் பண்பெதும் உண்மையில் எதுவுமில்லாப்
புன்மையேன் ஆயினும் புனிதநின் திருவருள் வரம்பிலா வாரி யென்று
.. புகன்றிடக் கேட்டுளேன் புல்லன்நான் ஆகையால் புறக்கணித் திடுத லென்ப(து)
அன்னியம் உனக்கென அறிந்தபின் வந்துளேன் ஆதரித் தருளு வாயேல்
.. அகன்றிடும் என்துயர் அதன்பினென் அழுகுரல் உன்செவி மடுக்க வேண்டா
பொன்னிற மேனியும் பூணும்வி பூதியும் புரிசடை மீது கொன்றை
.. புரளுமக் கோலமும் பொருந்தநீ வருமெழில் காட்டினால் போதும் ஐயே.
(14-சீர் ஆசிரிய விருத்தம். அரையடி: கூவிளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா -படிக்கையில் ஈற்றுச் சீரை விளங்காய்ச் சீராகவும் கொண்டு படிக்கலாம்.)
... அனந்த் 26-9-2019