Saturday, November 23, 2019

என்னைக் கவர்ந்தோன்


                               திருச்சிற்றம்பலம் 


                      <> என்னைக் கவர்ந்தோன் <>













இல்லையினி நாடுவதற்(கு) இறையெவரும் எனும்படியாய்ப்
பல்வேறு தெய்வங்கள் பால்நாடிச் சென்றேனைச்
சொல்லெதுவும் இன்றிக்கைச் சுட்டொன்றால் வரவழைத்துக்
கல்லாலின் கீழிருக்கும் கடவுளுனைக் காட்டினையே.

                   


கரும்பதுதன் சுவைகாட்டிக் கட்டெறும்பைக் கவர்வதுபோல்
பெரும்பற்றப் புலியூர்ப்பொன் மன்றிலுன்றன் நடத்தெழிலைத்
துரும்பிலுங்கீழ் ஆனஇந்தத் துட்டன்முன் காட்டியினி
விரும்பினும்நான் வேறுதிசை செல்லவொட்டா(து) ஆக்கினையே.


                                                                                                                                                                             
கண்ணின்நீ ரருவியிலென் கடவுளுனை நீராட்டி
வெண்ணீற்றுப் பூச்சாலுன் மேனியைநான் எழிற்படுத்தி
உண்ணெக்கு நெக்குருகி உளறுவதைத் தோத்திரமாய்ப்
பண்ணின்றிப் பாடுவதைப் பரிகசியா தேற்பாயே.

..அனந்த் 23-11-2019 சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள் 

Friday, November 8, 2019

மாடு பெரிது

திருச்சிற்றம்பலம் 

                         <> கூத்தின் இறை <>

     

மாடூரும் அன்பர் மனமுருகிப் பாடிவைத்த
ஏடூரும் தேகம் எரிந்தழிந்து மாயுமந்தக்
காடூரும் காண்பொருட்கள் ஊடூரும்  என்நெஞ்சக்
கூடூரும் கூத்தின் இறை.   
(ஊர்தல்= ஏறிச்செல்லுதல், சஞ்சரித்தல், பரவுதல், அடர்தல்….)


                   <> மாடு பெரிது <>





















மாடு முதுகேற்கும் மந்திரஞ் சொல்லியோர்
ஆடு துதிசெய்யும் ஆங்கொருபேய்  காடடைந்து
பாடும் பதிகம் பரமன் இவனது
மாடு மிகப்பெரிதம் மா!
(மாடு = நந்தியெம்பெருமான், புகழ்; ஆடு = தக்கன், மந்திரம் = சமகம்; பேய் = 
காரைக்காலம்மையார்)
அனந்த் 9-11-2011 சனிப் பிரதோஷம்


கூத்தன்


இன்று சனிப் பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                                                           <> கூத்தன்  <> 


                           


 மழுவை ஏந்தும் கையொன்று மாந்தர் பிறவித் தளையறுக்கும்

..வடிவார் துடிசேர் கரமொன்று வாவென் றடியார் தமையழைக்கும்

எழுமான் ஏந்தும் கையொன்றோ ஏகும் மனத்தை நிலைநிறுத்தும்
.. எரியைத் தாங்கும் கரமொன்றோ ஏதம் சிறிதில் லாதழிக்கும்

தொழுவார்க் கருளும் பதமொன்று  தோலா அருளைச் சுட்டிநிற்கும்
.. தொண்டர் வருடும் அடியொன்று தோற்றம் மறையும் மெய்யுணர்த்தும்

வழுவா திந்த வடிவினைநாம் வாழ்த்தி வணங்கு வோமாயின்

 வருமோ இதைவிட் டொருநினைப்பு வாழ்க்கைக் காலம் முழுவதுமே.


(பன்னிருசீர் விருத்தம், 1,4 சீர் குறில்-நெடில் இணை;  எழுமான் = எழுந்தோடும் மான்; ஏகும் = கண்ட இடம் செல்லல்; எரி=நெருப்பு; ஏதம் = துன்பம், குற்றம்; தோலா = தவறாத; )