Thursday, February 20, 2020

<> அருள் சூழ்ச்சி <>


 திருச்சிற்றம்பலம்

                                  <> அருள் சூழ்ச்சி <>

      


பொன்னம் பலத்தரசே! புகலவொரு சொல்லில்லா
உன்னழகை உன்ஒயிலை உன்நகையை உன்பவிசை
உன்னுகையில் என்னுளத்தில் ஊறிவரும் உவகையிலே
என்னையான் மறந்திடுவேன் இதுவுன்றன் சூழ்ச்சியன்றோ?
(சூழ்ச்சி = தந்திரம்)


                             <>  அருள் வீழ்ச்சி <>


                                         













தாய்மடியில் துஞ்சுகின்ற தளிர்குழவி பெறுசுகத்தைப்
பேய்மனத்தின் பிடிசிக்கிப் புலம்புமிந்தப் பேயனுக்கு
வாய்திறந்தோர் வார்த்தைசொலா வள்ளலவன் என்னுளுறை

தூய்மைதரும் உணர்வதனில் தோய்த்தெடுத்து வழங்கினனே.



                       <>  அணைக்கும் மலை <>


                

உள்ளும் வெளியும் உலவுமொரு காற்றொருநாள்
மெள்ளத்தன் வேலையை விட்டபின்கள்ளம்நிறை
தேகத்தைத் தீயணைக்கும் அத்தருணம் நீயணைப்பாய்
மாக(ம்)முட்டு(ம்) அண்ணா மலை.

இருளில் கிடந்துழன்றிவ் வாழ்வைக் கழித்துப்
பொருளின் பொருளறியாப் பொல்லேன்மருளகற்றத்
திருவுள்ளம் பற்றித் தீவண்ணம் காட்டி
அருளினைநீ அண்ணா மலை. 

(மாகம் = ஆகாயம்; பொருளின் பொருள் = செல்வம் திரட்டுவதன் பொருள்; வெளியுருவின் உள்நிற்கும் பேருணர்வு) 

அனந்த் 20-2-2020 (திருவண்ணாமலையிலிருந்து)


Wednesday, February 5, 2020

ஒன்றிட உதவு


            திருச்சிற்றம்பலம்

  <> ஓடம் <>



கூற்றை உதைக்கவும் கூத்தாடி நிற்கவும்
ஏற்றுவாய் உன்றன் இடப்பதத்தை – போற்றியுன்னைப்
பாடவரும் அன்பர் பவக்கடலைத் தாண்டுதற்கு
ஓடமுமாம் உன்இடது தாள்.


<> ஒன்றிட உதவு <> 














ஒன்றேயாம் மெய்யதனின்(று) ஒன்றுளதாய்த் தோன்றின்மெய்
அன்றது மாயை அறியென - என்றுமுள
குன்றுருவில் கூறும் குருவேஉன் னோடுநான்
ஒன்றிட இன்றே உதவு.

(என்றுமுள குன்று =  அருணாசல மாமலை ஆதி சிவனின் சோதி உருவானது நான்கு யுகங்களிலும், முறையே, தங்கம், வெள்ளி, செம்பு, கல்லால் ஆகிய மலையாய்த் தோற்றம் தருமெனக் கூறுவர்.)

<> ஒரே கேள்வி <>

 

வகைவகையாய் என்றன் மனத்தெழுந்த கேள்வித்
தொகையைச் சுவைத்த சுகத்தின் – பகையாகக்
கேட்பவன்யார் என்னுமொரு கேள்விதந்து மற்றவற்றைக்
கூட்டோ டழித்தான் குரு!


… அனந்த் 6-2-2020 பிரதோஷ நன்னாள்.