Wednesday, February 5, 2020

ஒன்றிட உதவு


            திருச்சிற்றம்பலம்

  <> ஓடம் <>



கூற்றை உதைக்கவும் கூத்தாடி நிற்கவும்
ஏற்றுவாய் உன்றன் இடப்பதத்தை – போற்றியுன்னைப்
பாடவரும் அன்பர் பவக்கடலைத் தாண்டுதற்கு
ஓடமுமாம் உன்இடது தாள்.


<> ஒன்றிட உதவு <> 














ஒன்றேயாம் மெய்யதனின்(று) ஒன்றுளதாய்த் தோன்றின்மெய்
அன்றது மாயை அறியென - என்றுமுள
குன்றுருவில் கூறும் குருவேஉன் னோடுநான்
ஒன்றிட இன்றே உதவு.

(என்றுமுள குன்று =  அருணாசல மாமலை ஆதி சிவனின் சோதி உருவானது நான்கு யுகங்களிலும், முறையே, தங்கம், வெள்ளி, செம்பு, கல்லால் ஆகிய மலையாய்த் தோற்றம் தருமெனக் கூறுவர்.)

<> ஒரே கேள்வி <>

 

வகைவகையாய் என்றன் மனத்தெழுந்த கேள்வித்
தொகையைச் சுவைத்த சுகத்தின் – பகையாகக்
கேட்பவன்யார் என்னுமொரு கேள்விதந்து மற்றவற்றைக்
கூட்டோ டழித்தான் குரு!


… அனந்த் 6-2-2020 பிரதோஷ நன்னாள்.

No comments: