திருச்சிற்றம்பலம்
<> ஆதாரம் <>
சந்தம்: தனன தான தானான தனன
தான தனதான
தனன தான தானான தனதான
உடலு நானு வேறாகு முணர்வு ளூறி மயல்பாறி
..யுடைய நாளு மோயாத சமுசாரக்
கடலை மீறி மேலான பதம தீயு பதமான
… கமல மேயெ னாதார மலவோமுன்
விடம தேயொர் வாகாக மிடறி லேறி யணியாகி
... விமலை வீரி சீர்கூற வவளோடு
நடன ராச னாய்நாலு மறைக ளோசை வானேகு
.. நகர மீது நாடோறு மிளிர்வோனே
(பாறி = அழிந்து, கிழிபட்டு; பதம் = பதவி, பாதம்; வாகாக =அழகாக )
பதம் பிரித்து:
உடலும் நானும் வேறுஆகும் உணர்வுஉள் ஊறி மயல்பாறி
..உடைய நாளும் ஓயாத சமுசாரக்
கடலை மீறி மேலான பதம்அது ஈயும் பதமான
… கமல மேஎன் ஆதாரம் அலவோ?முன்
விடம தேஒர் வாகாக மிடறில் ஏறி அணிஆகி
... விமலை வீரி சீர்கூற அவளோடு
நடன ராச னாய்நாலு மறைகள் ஓசை வான்ஏகும்
.. நகரம் மீது நாள்தோறும் மிளிர்வோனே.
(பின்னிரு அடிகளின் விளக்கம்: உலகை அழியாமல் காப்பதற்காக ஆலகால விடத்தை ஈசன் உண்டபோது அது அழகாக ஐயன் கழுத்திலேறி ஒரு ஆபரணம் போலாகியது மட்டுமன்றி, அவ்விடம் அரனின் உடலைப் பாதிக்காமல் இரு க்க அது கழுத்தோடு நிற்குமாறு செய்த உமை அன்னையின் பெருமையையும் பறைசாற்றியது; அவளோடு ஈசன் தில்லையில் நடனம் செய்வது இறுதியில் சுட்டப்படுகிறது.)
... அனந்த் 19-4-2020